ரயில்வே பணி நிமித்தம் காரணமாக மாதத்தில் சுமார் பத்து நாள்களே இயக்கப்படும்திருச்செந்தூர்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் மாற்று நேரத்தில் இயக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
திருச்செந்தூர்-பழனி சாதாரண கட்டண ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது பொள்ளாச்சிக்கு நீட்டிக்கப்பட்டு பின்னர் அது பாலக்காடு வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் மிகவும் பயனடைந்தனர். ஆனால் திருச்செந்தூர், திருநெல்வேலி பகுதியிலிருந்து பழனி செல்லும் பக்தர்களுக்கு பழனி சென்றடைய இரவு 8 மணி ஆவதால் அங்கு கோயிலில் நடைசாத்தப்பட்டு விடுவதால், இரவு தங்கி மறுநாள்தான் தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
ஆனால் திருச்செந்தூருக்கு மாலை 4 மணிக்கு வந்து விடுவதால் அன்றே தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இதே மாதிரி சென்று சேரும் அன்றே பழனியில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டாதா என திருச்செந்தூர், திருநெல்வேலி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருநெல்வேலி-மதுரைக்கு இடையில் பராமரிப்பு நடைபெறுவதாக கூறி அடிக்கடி இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகின்றது. கடந்த இரு மாதங்களாக கோவில்பட்டி விருதுநகருக்கு இடையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதாக கூறி மாதத்தில் பத்து தினங்கள் மட்டுமே பாலக்காடு வரை இயக்கப்படுகிறது. 20 நாள்கள் திருநெல்வேலி வரைதான் இயக்கப்படுகிறது. இதனால் ரயில்வேக்கு 50 சதத்துக்கும் மேலே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த ரயிலை திருச்செந்தூரில் காலை 9 மணிக்கு இயக்கினால் பழனி கோயிலுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து திரும்புபவர்களும் தங்கள் பகுதிக்கு விரைவில் திரும்பிவிட வாய்ப்பு ஏற்படுமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர். திருச்செந்தூர் -பாலக்காடு ரயிலை காலை 9 மணிக்கு இயக்கினால் இருபுறம் வரும் பக்தர்களும் பயனடைவதுடன் பராமரிப்புப் பணிக்காக அந்த ரயிலை இடை நிறுத்தம் செய்யாமல் இயக்கலாம் என்றும் ரயில்வேக்கு வருவாய் குறையாமலிருக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேற்கண்ட நேர மாற்றத்தை ரயில்வே துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பமாகும்.