தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிள்ளிக்குளத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண்மைக் கல்லூரியில் தினக்கூலியாக 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கல்லூரியில் பணிபுரியும் அனைவருக்கும் வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும், சம்பள நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மார்ச் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.