தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மிதமான மழையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 6 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து வீணாக கடலில் கலந்தது.
இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வருகை தந்தார். அவர் தூத்துக்குடி மாவட்ட எல்லையான மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டுகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கட்டு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த அணைக்கட்டில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி கரையோர கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 4 வாய்க்கால்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் இந்த 4 வாய்க்கால்களை சார்ந்த 53 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் எந்தவிதத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ளத்தால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொறுத்தவரை 50 சதவீதம் மட்டுமே முழுமையடைந்துள்ளது. இன்னும் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க சார் ஆட்சியர் பிரசாத் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித் துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு வசதிக்காக 24 மணி நேரமும் அமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.