உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருநெல்வேலி உடையார்பட்டியில் தூர்வாரப்பட்ட குளத்தைப் பராமரித்தல் மற்றும் அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குளம், ஏரி பராமரிப்புத் திட்டத்தின் கீழ், ‘போஷ் இந்தியா’ (Bosch India) மற்றும் ‘ போஷ் இந்தியா பவுண்டேஷன்’ நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) ஆதரவுடன், ‘எக்ஸ்னரோ சர்வதேச அமைப்பு’ மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடையார்பட்டிக் குளம் தூர்வாரப்பட்டது. இந்தத் தூர்வாரும் பணியை முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் சுகுமார் துவக்கி வைத்தார். தற்போது அதனை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தல் மற்றும் பராமரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த மோகன் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டுச் சிறப்புரையாற்றினார். போஷ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் பஞ்சு அருணாசலம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னரோ அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி வரவேற்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, “பொதுமக்கள் அனைவரும் நிறுவனங்களோடு இணைந்து இப்பெரும் பணியைச் செய்திருப்பதற்குப் பாராட்டுகள். தொடர்ந்து உடையார்பட்டிக் குளத்தைப் பராமரித்து, மரங்களை நடுவதற்கான பணியை இன்று துவக்கி வைத்துள்ளோம். தொடர்ந்து திறம்பட உடையார்பட்டிக் குளம் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மிக முக்கிய நதியான தாமிரபரணி நதியைக் காக்கப் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் துரை, பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் கோவிந்தராஜன், மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் கண்ணன், கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். வட்டாட்சியர் (தாசில்தார்) மாரிமுத்துகுமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன், எக்ஸ்னரோ சமூகச் செயல்பாட்டாளர் ராதா, விஜய், கபடி முருகன், தச்சை மண்டல முன்னால் சேர்மன் சுப்பிரமணியன், பசுமை நகர அரிமா பட்டய தலைவர் திருமலைமுருகன், தலைவர் நடராஜ
ன், செயலாளர் சேவியர், கிருஷ்ணகுமார், போஷ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டாளர் நிரஞ்சனி, சமூகச் செயல்பாட்டாளர் ராஜேஷ், ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) பாலமுருகன், லயன்ஸ் திருமலை முருகன், கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நன்றி கூறினார்.


