
தமிழ்நாட்டில் உள்ள கனிமங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம் தான் 8 வழிச்சாலை என த.மு.மு க பொதுசெயலாளர் செய்துங்கநல்லூரில் பேட்டியளித்துள்ளார்.
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு செய்துங்கநல்லூர் கிளைத் தலைவர் இர்ஷாத் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா முகைதீன், ஒன்றிய தலைவர் ஒலிம்பிக் மீரான், ஒன்றிய செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, த.மு.மு.க கிளை செயலாளர் அசார், ம.ம.க கிளை செயலாளர் ரியாஸ், கிளை பொருளாளர் அன்சர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மரக்கன்றை நட்டு த.மு.மு.க பொதுச்செயலாளர் ஹைதர்அலி சிறப்புரையாற்றினார்.
அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் எங்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது போலிசார் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்துவருகிறார்கள். போலிசார் அதனை கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் மற்றும் போலிசார் மீது வழக்கு தொடரப்படும். தமிழ்நாட்டில் நடப்பது மத்திய அரசு ஆட்சிதான். அந்த ஆட்சியை எதிர்க்கும் போது தான், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பினாமிகள் மீது வருமான வரித்துறை பாய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கனிமங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம் தான் 8 வழிச்சாலை. ஒரு காலத்தில் காமெடி என்றாலே வடிவேலு காமெடியை வைத்து தான் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டு வந்தனர். ஆனால் இனிமேல் தமிழ்நாடு பாஜகவினரை வைத்துதான் மீம்ஸ் போட வேண்டும். அந்த அளவிற்கு தமிழகத்தில் பாஜக காமெடியாக செயல்படுகிறது. அவர்களின் ஆட்சி நிறைவு காலம் நெருங்கி வருவதால் பாஜகவினர் பயந்து கொண்டிருக்கின்றனர். வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனைக்கு பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தனர். 540 கோடியை வண்டியில் கொண்டு சென்றார்களே. அந்த பணம் எங்கே சென்றது. என்ன வானது. எல்லோருமே கூட்டு களவாணிகள் என அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட தலைவர் ஆசாத், மாவட்ட செயலாளர் மோத்தி, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட பொருளாளர் நாசர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பீரப்பா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இம்ரான் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.