தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது முன்னோர்களின் நினைவாக தற்போது குட்டி என்ற சண்முகசுந்தரம் அந்த பூஜை அறையை நிர்வாகித்து வருகிறார்.
பூஜை அறையில் 1008 உத்திராட்சங்களால் உருவாக்கப்பட்ட திரைக்கு உள்ளே சுவாமி சிலைகள் உள்ளன. அருகிலேயே பல கைத்தடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கைத்தடிகளுக்கு தினமும் பூஜை நடக்கிறது.
இதன் பழமை 200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். கைத்தடிகள் வாக்கிங் ஸ்டிக் போல காணப்படுகின்றன. கைப்பிடியின் மேல் பகுதியில் நட்சத்திரங்கள் போன்ற குறியீடுகள் உள்ளன. கைப்பிடிகள் சில மிருக உருவத்துத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த கைத்தடியின் வாய்ப்பகுதியை திறந்தால், உள்ளே லட்சுமி, பழநியாண்டவர், பரமசிவன் போன்ற தெய்வ உருவங்கள் உள்ளன.
குளத்தூர் ஜமீன்தார்கள். தங்கள் இல்லத்தில் உள்ள பூஜை அறைக்கு தினமும் மூன்று வேளை பூஜை செய்து வணங்கக் கூடியவர்கள். செல்லும் இடத்தில் கோயில்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் தெய்வத்தை வணங்கியே ஆக வேண்டும். எனவே பிரேத்யேகமாக ஒரு கைத்தடியை வடிவமைத்து அதை உடன் கொண்டு சென்றனர். பூஜைநேரம் வந்தவுடன் அந்த இடத்தில் கைத்தடியை ஊன்றி, மூடியை திறந்து அதனுள் உள்ள தெய்வத்துக்கு பூஜை செய்வார்கள். இதை தில்லை தாண்டவராயர் காசி யாத்திரை சென்றபோது கூட பயன்படுத்தியிருக்கிறார். அந்த கைத்தடிகள் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பூஜையறையில் தில்லை தாண்டவராயர், அமாவாசை சித்தர் உள்பட சில ஜமீன்தார் படங்கள் வைத்து வணங்கப்படுகின்றன.
அடுத்த அறைக்குள் மிகப்பெரிய தாழ்வாரம் உள்ளது. அங்கு ஒரு கட்டிலைப் பாதுகாத்து வருகிறார்கள் ஜமீன்தார் வாரிசுகள். அது மகாத்மா காந்தி அமர்ந்த கட்டில்! காந்திஜி திருநெல்வேலி வந்தபோது சாவடிப் பிள்ளை வீட்டில் தங்கினார். அப்போது ஆங்கிலேயர்களுக்கும் குளத்தூர் ஜமீன்தார்களுக்கும் நல்ல உறவு இருந்தது. எனவே மகாத்மாவை தங்கள் வீட்டுக்கு அழைக்க முடியாது. ஆனாலும் மகாத்மா மீது நல்ல மரியாதை வைத்திருந்ததால், தங்களது உறவினரான சாவடிப்பிள்ளை வீட்டில் மகாத்மா காந்தி தங்கி ஓய்வெடுக்க கட்டிலை கொடுத்து அனுப்பினர். அது இந்த கட்டில்தான். இந்த கட்டிலை மிகவும் வயதானவர்கள்தான் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் அமரக்கூடாது என்பது இவ்வீட்டின் சட்டம்!
குளத்தூர் ஜமீன்தார்கள் திருநெல்வேலி மாநகரில் தங்கள் அரண்மனையை கட்டியபோது நெல்லையப்பர் கோபுரத்தினை விட சற்று தாழ்வாகவே கட்டினார்கள். நெல்லையப்பரே இந்நகரில் உயர்ந்தவர், வசதியானவர், அனைவரையும் காக்கும் தன்மை கொண்டவர். எனவே அவரின் இல்லத்தினை விட, தங்கள் அரண்மனை குறைந்த உயரத்தில்தான் இருக்க வேண்டும் என்ற பக்தி எண்ணம் தான் காரணம்.
நன்றி – தினகரன் ஆன்மீகம் ஆசிரியர் திரு.பிரபுசங்கர் அய்யா அவர்கள்,