தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏரல் பெரியமணரா நாடார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37), டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்றவுடன் செல்போனில் ஆபாச படம் பார்க்குமாறு அந்த மாணவரை கருப்பசாமி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அந்த மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவரின் கழுத்து, மார்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் கருப்பசாமிக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த இருவரும் ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.