செய்துங்கநல்லூர் நகரை மேம்படுத்தத் தூத்துக்குடியில் உள்ள ஊர்வசி அமிர்த ராஜ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் தலைமை தாங்கினார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சாத்தான்குளம் சங்கர், சமூக சேவகர் சுடலை முத்து உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து வளர்ந்து வரும் பஞ்சாயத்து ஆகும். ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் முதல் வார்டே இந்த பஞ்சாயத்து தான். இங்குக் குடியிருப்புகள் மிக அதிகமாகப் பெருகி வருகிறது. எனவே மக்கள் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அது போதுமானது அல்ல. எனவே செய்துங்கநல்லூரில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைப்பது. தெருக்களில் சாக்கடை வாறுகால் அமைத்து, அதைச் சுத்திகரித்து நல்லதண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவது செய்துங்கநல்லூரில் அனைத்து தெருக்கள், அய்யனார் குளம் பட்டி, கீழப்பட்டி, கரையடியூர், சந்தையடியூர் மேலத்தூதுகுழி, கீழத்தூதுகுழி உள்பட அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் கல் அமைப்பது. செய்துங்கநல்லூரில் நீண்ட நாள் செயல் பட்ட சித்தா மருத்துவ மனை தற்போது செயல் படாமல் உள்ளது. இந்த மருத்துவமனையை மீண்டும் செயல் படுத்த சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கேள்வி எழுப்பக் கோரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து ஊர்வசி அமிர்த ராஜ் சட்டமன்ற உறுப்பினர் கூறும் போது செய்துங்கநல்லூர் எனது தொகுதியில் வளர்ந்து வரும் கிராமம் ஆகும். இங்கு ரயில் நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, ஒன்றியம் அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்கள் உள்ளது. இந்த ஊரில் குடியிருப்பு பெருகி வருகிறது. அதற்கு முறையான வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அது குறித்து பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். மேலும் இது குறித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்று பஞ்சாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியை மேம்படுத்த, ஸ்ரீ வைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் படகு குழாம் அமைக்கும் பணி, அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதியை மேம்படுத்தி இங்கு எடுக்கப்படும் பொருள்களை இங்கே காட்சிப்படுத்தி தொகுதியைச் சுற்றுலா இடமாக மாற்றச் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


