இந்த மாதம் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே சிறப்பான காலம் என்றே நினைக்கிறேன். எனக்கு சுமார் மூன்று இடத்தில் விருது கிடைத்தது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்து விருது வாங்க நான் செல்லவே முடியவில்லை. இது ஒரு புறமிருக்க எனது மகள் ஆனந்த சொர்ண துர்க்காவுக்கு செய்துங்கநல்லூரில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 33 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் 6 பரிசை கொடுத்தனர். சென்டம் எடுத்த வகைக்கும், இரண்டு செமஸ்டரில் இரண்டாம் இடத்தினை பிடித்த வகைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கௌசானல் அடிகளார் ஆவணபடத்தினை இயக்கிய வகைக்கு என்னை கௌரவித்த திருஇருதய சகோதரர் சபை துணை அதிபர் கஷ்மீர் சகாயநாதன் அவர்கள்தான் இங்கேயும் என் மகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். மற்றொரு பரிசை சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் வழங்கினார். மிக சந்தோஷமாக இருந்தது. வாழத்துகிறேன் ஆனந்த சொர்ண துர்க்கா. நீ.. மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரி தாளாளர் அந்தோணி பெர்ணான்டோ வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன், புனித வளனார் மீனவர் கல்வி அறக்கட்டளை டாக்டர் பொர்ஜியோ, பிரட்டிக் விக்டோரியா, செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் நிம்மிரென், ஆட்டோமோபைல் துறை தலைவர் ஜாய்ஸ் மேரி உள்பட பலர் பேசினர். கல்லூரியில் விளையாட்டு போட்டி மற்றும் கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் அன்சலாம் ரோஜர், உள்பட பலர் கலந்துகொண்டனர்.முதலாமாண்டு தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
எனது மகளுக்கு பரிசு கிடைக்க உதவியாக இருந்த கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், துறை தலைவர் அமலன் மற்றும் துறை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. மகளை பாராட்டுங்கள். ஊக்கம் கொடுங்கள்.