செய்துங்கநல்லூரில் உள்ள வார சந்தை ஏலம் நடந்தது. இதில் வரலாறு காணாத வகையில் 108 பேர் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டை விட 9 லட்ச ரூபாய் அதிகமாக ஏலம் தொகை உயர்ந்தது.
செய்துங்கநல்லூரில் உள்ள வார சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. புதன்கிழமை தோறும் கூடும் இந்த சந்தையில் தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்துகொள்வார்கள். வருடம் வருடம் சந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு சந்தை வளர்ச்சி அடைந்து விட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட சந்தை வளாகம் போது மானது அல்ல என்று அருகில் உள்ள சமுதாய நலக்கூட வளாகத்திலும் தற்போது சந்தை நடைபெறுகிறது. அதுவும் போதாது என்று நெல்லை திருச்செந்தூர் சாலை இருபுறம் வியபாரிகள் அணிவகுத்து வியாபாரம் பார்த்து வருகின்றனர்.
சுமார் 1 லட்சம் வரை பொதுமக்கள் இந்த சந்தையில் கூடுகின்றனர். இங்கு சீப்பு, கண்ணாடி முதல் மிட்டாய், அதிரசம், திருவல், காய்கறி, மீன், கருவாடு, உள்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இங்கு கிடைக்கிறது.
வருடத்துக்கு ஒரு முறை இந்த சந்தை ஏலம் விடப்படும். கடந்த வருடம் 2 லட்சத்து 60 ரூபாய் ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த வருடத்திற்கான ஏலம் நேற்று காலை 10 மணிக்கு செய்துங்கநல்லூரில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் கிரி , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திர பிரபு, மேலாளர் ராஜா ஆகியோர் ஏலத்தினை நடத்தினர். ஏலத்திற்கு முன்வைப்பு தொகை 25 ஆயிரம் என நியமனம் செய்யப்பட்டிருந்தது. சுமார் 108 பேர் முன் வைப்பு கட்டினர். பின் ஏலம் துவங்கியது. ஆரம்ப தொகை 2 லட்சத்து 90 ஆயிரம் நியமனம் செய்யப்பட்டிருந்தது. தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த பண்டாரம் என்பவர் 11 லட்ச ரூபாயிக்கு சந்தையை ஏலத்துக்கு எடுத்தார்.
சந்தை ஏலத்தினையொட்டி ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாய ஜோஸ் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும்காவலர்கள் செய்திருந்தனர்.
அடிப்படி வசதி வேண்டும்
புதன்கிழமை சந்தை செய்துங்கநல்லூரில் பிரசித்தி பெற்று விட்டது. ஆனால் அடிப்படை வசதி மட்டும் உயரவில்லை. சந்தை முடிந்தவுடன் சந்தையை சுத்தம் செய்வது இல்லை. சந்தை உள்ளே உள்ள பொது கழிவறை தண்ணீர் இன்றி உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த செய்துங்கநல்லூரில் பொது கழிவறை வசதி இல்லை. போக்குவரத்துககு இடையூறு இல்லாமல் சந்தையை வைக்க நடவடிக்கை இல்லை. சந்தைக்கு பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தினை கையகப்படுத்தி உள்பக்கம் வரை சந்தையை மேம்படுத்தலாம் இதற்கு நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொதுமககள் கோரிககை விடுத்துள்ளனர்.