செய்துங்கநல்லூர் அருகே பூச்சிக்கடிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நர்ஸ் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். எனவே தூத்துக்குடி ஆர்.டி.ஓ விசார¬ணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலங்காட்டான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (40). தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஆனந்தஈஸ்வரி (36) நர்சிங் படித்து முடித்துள்ள இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்ளார்.
கடந்த 4ம்தேதி இரவு ஆனந்த ஈஸ்வரி குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ பூச்சி கடித்தது மாதிரி இருந்ததாம். இதைத் தொடர்ந்து மறுநாள் 5ம் தேதி கருங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அங்கிருந்து பாளையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற போதிலும் அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படி 3 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 6ம்தேதி ஆனந்தஈஸ்வரி தனியார் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு சென்றவருக்கு மறுநாள் 7ம்தேதி தலைசுற்றல் ஏற்படவே உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளதால் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் விசாரித்து வருகிறார்.
இறந்த ஆனந்த ஈஸ்வரிக்கு சொந்த ஊர் திருவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சி. இவரது தந்தை பெரியசாமி கடந்த 20 ஆண்டுக்கு முன்பே சந்தையடியூர் வந்துவிட்டார். செல்வத்துக்கும் & ஆனந்த ஈஸ்வரிக்கும் திருமணமாகி 5 ஆண்டு ஆவதால் தூத்துக்குடி ஆர்டிஓ விசாரித்து வருகிறார். நர்ஸ் மர்மச்சாவு இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.