செய்துங்கநல்லூர் அருகே நீர் வழி புறம்போக்கில் வீடு கட்டியவர்கள் மீது ஆக்கிரமிப்பை அகற்ற ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.
அதில் அரசின் சொத்தாக இருக்கிற குளம் புறம்போககு நிலத்தில் வீடு கட்டி ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே 7 தினங்களுக்குள் நேரிலே அல்லது எழுத்து வடிவிலோ வட்டாட்சியர் முன்பு விளக்கம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905ன் கீழ் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பிரதிநிதி கோபால் கூறும்போது, இந்த பகுதியில் வசிக்கும் மககள் அனைவருமே ஏழ்மை நிலையில் உள்ளனர். மேலும் இந்த இடங்கள் எந்த நீர் பிடிப்பு பகுதிக்கு சம்பந்தமில்லாதது. அதோடு மட்டுமல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ள இந்த மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். எனவே விளை நிலங்கள் பக்கத்திலேயே குடியேறி உள்ளார்கள். வேறு எங்கும் சென்று குடியேற முடியாது. எனவே இவர்கள் வாழ்வாதரமாக விளங்கும் இந்த பகுதியை விட்டு அவர்களை காலி செய்ய எந்த வித முயற்சியும் எடுக்ககூடாது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நேரிலும், எழுத்து பூர்வமாகவும் கொடுத்துள்ள விளக்கத்தினை ஏற்றுகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்துங்கநல்லூர் பகுதியில் தூதுகுழி, அண்ணாநகர், தென்னஞ்சோலை, கலைஞர்நகர், வேளங்காட்டான் கோயில் தெரு பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டிஸ் விடப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.