செய்துங்கநல்லூரில் நிறுத்தாமல் செல்லும் கம்பம் அரசு பேருந்தால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
கம்பத்தில் இருந்து செய்துங்கநல்லூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பேருந்து ஒன்று தினமும் காலை 11.40க்கு செல்கிறது. இந்த பேருந்தில் கடந்த 29ந்தேதி 4 பெண்கள் உள்பட ஐந்து பயணிகள் வி.எம்.சத்திரத்தில் ஏறினார்கள். ஆனால் பேருந்தில் நடத்துனர், செய்துங்கநல்லூரில் இந்த பஸ் நிற்காது என பயணிகளிடம் கூறினார். அதன்பின் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷ் என ரூபாய் 25க்கான பயணச்சீட்டை கொடுத்தார். அதை பெற்று கொண்ட பயணிகள் டிரைவர் கண்டக்டரிடம் கெஞ்சி கூத்தாடி செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் இறங்கி கொண்டனர்.
இதுகுறித்து இந்த பஸ்ஸில் பயணம் செய்த திருப்பதி கூறும்போது, நெல்லை திருச்செந்தூர் வழியில் எந்த அரசு பேருந்து என்றாலும் அது நின்று செல்லுவது தான் வாடிக்கை. அது எப்.பி, ஒன்.டூ.திரி, எஸ்.எப்.எஸ். என எந்த ரூபத்தில் ஸ்பெஷல் போர்டு மாட்டினாலும் செய்துங்கநல்லூரில் நின்று தான் செல்லும். ஆனால் நாங்கள் ஏறி பயணம் செய்த கம்பம் பேருந்து ஸ்ரீவைகுண்டம் தான் எங்களுக்கு ஸ்டேஷ் என்று கூறினார்கள். ஆனால் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இந்த பஸ் செல்லாதாம். செய்துங்கநல்லூரில் நிற்காது என்கிறார்கள். வி.எம்.சத்திரமும் பஸ் நிறுத்தம் கிடையாது என்கிறார்கள். ஆனால் எங்களை வி.எம்.சத்திரத்தில் ஏற்றி உள்ளனர். செய்துங்கநல்லூரில் இறக்கி உள்ளனர். பஸ்நிறுத்தம் கிடையாது என்று கூறி ஸ்ரீவைகுண்டம் டிக்கட் கொடுத்து அதிக கட்டணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பது புலப்படவில்லை.
இது போல பேருந்து இயக்க அரசு போக்கு வரத்து அலுவலகம் அனுமதி கொடுத்து இருக்கிறதா.. என்பதே.. சரிவர தெரியவில்லை. கட்டணத்தினை உயர்த்துவதற்காக இதுபோன்று போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்கிறது. அனைத்து பேருந்தும் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளே கூறுகிறார்கள். கம்பம் & திருச்செந்தூர் அரசு பேருந்து மட்டும் இதற்கு விதி விலக்கா. எனவே உடனடியாக சரியான கட்டணம் வசூலித்து கம்பம் & திருச்செந்தூர் அரசுபேருந்தை நின்று செல்ல வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதி மன்றத்தினை நாடுவதை தவிர வேறு வழிதெரியவில்லை என்று அவர் கூறினார்.