செய்துங்கநல்லூரில் துப்புறவு பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை துப்புறவு பணியாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராம பஞ்சாயத்தாகும். இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜனத்தொகை உள்ளன. வாரத்துக்கு ஒரு முறை பல ஆயிரம் மக்கள் கூடும் வாரசந்தை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்ற பஸ்நிலையம் இங்குள்ளது. மேலும் மாதத்துக்கு ஒருமுறை இந்த வழியாக திருச்செந்தூருக்கு நடைபயணமாக முருகப்பக்தர்கள் செல்கின்றனர். விரைவு ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையமும் இங்குள்ளது. எனவே இங்கு தினமும் குப்பைகள் சேர்ந்த வண்ணமே காணப்படுகிறது. குப்பையை அகற்ற இங்கு 10 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோது மானது அல்ல. மேலும் இவர்கள் தெரு தெருவாக சென்று குப்பை சேகரித்தல், குப்பை தொட்டிகளில் இருந்து குப்பையை அகற்றுதல், பஜாரில் குப்பை சேர விடாமல் பாதுகாத்தல், சாக்கடையை அகற்றுதல் போன்ற பணிகளை செய்துவருகின்றனர். சுமார் 40 க்கு மேற்பட்ட தெருக்கள் இங்குள்ள காரணத்தினால் தினமும் அனைத்து இடங்களிலும் பணி நடைபெற சாத்தியமில்லாமல் உள்ளது. கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து வருகிறது. இதற்கிடையில் பிரதி மாதம் இவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கருங்குளம் ஒன்றிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் சங்க செயலாளர் பெருமாள் கூறும் போது செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் கடந்த 20 வருட காலமாக துப்புறவு பணியாளராக பணியாற்றி வருகிறேன். இதுவரை சம்பளம் பாக்கி வைத்தது இல்லை. அந்தந்த மாத சம்பளம் 5 ந்தேதி வழங்கப்பட்டுவிடும். ஆனால் இந்த மாதம் சம்பளம் வழங்க பணம் இல்லை என அதிகாரிகள் சம்பளத்தினை நிறுத்தி விட்டனர். இந்த வருடம் பணியாளர்களுக்கு சீருடை, செருப்பு, சோப்பு, கை உறை, முகமூடி போன்றவையும் வழங்கவில்லை. உடனடியாக இதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று அவர் கூறினார்.