செய்துங்கநல்லூரில் சுற்றி திரியும் நாய் பன்றிகளை கட்டுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில் பத்து பஞ்சாயத்துகள் வளர்ந்து வரும் மிக முக்கிய பஞ்சாயத்துகளாகும். இந்த இரண்டு பஞ்சாயத்துகளும் மருதூர் மேலக்கால் வாய்க்கால் கரையில் உள்ளன. இங்கு தான் இரண்டு கிராமத்தின் கழிவு நீர்களும் சாக்கடையாக வெளியேற்றப்படுகின்றன. இதில் பன்றிகள் உருண்டு விட்டு தெருக்கள் வழியாக சுற்றி திரிகிறது. இதனால் டெங்கு உள்பட பல நோய்கள் வர வாய்ப்புள்ளது.
அதே போல் சிறிது காலமாக செய்துங்கநல்லூர் பஜாரில் எங்கிருந்தோ கொண்டு வந்துவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் அங்குமிங்கும் ஓடிதிரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நாய் மற்றும் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என செய்துங்கநல்லூர் தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தாவிடம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் வைத்து மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அவர் ஆவண செய்வதாக வாக்களித்தார்.
அப்போது செய்துங்கநல்லூர் தவ்ஹித் ஜமாஅத் செயலாளர் வஹாப், தலைவர் சாதிக், பொருளாளர் செய்யது இபுராகீம், துணை தலைவர் அப்துல்கனி, கரீம் பாஷா, நவாஸ், ஹம்சா, சேக் அப்சர், வாஹிம், காஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.