செய்துங்கநல்லூரில் குடிதண்ணீர் கேட்டு காலி குடத்துடன் ஒன்றிய அலுவலகத்தினை பெண்கள் முற்றுகையிட்டனர்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் 100 குடும்பத்தினை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு குடிதண்ணீர் முறையாக கிடைக்கவில்லை. மேலும் இங்கு சாக்கடை நிறைந்து காணப்படுகிறது. இதனால் கொசுதொல்லையும் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் இன்று காலை இந்த தெருவுக்கு ஆற்று தண்ணீரை திறந்து உள்ளனர். ஆனால் தண்ணீர் குறிப்பிட்ட பகுதிக்கு வரவில்லை. எனவே காலிகுடத்துடன் பெண்கள் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் செய்தனர். பின்னர் அவர்கள் காலி குடத்துடன் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில அன்னை மலர் முகம் மகளிர் குழுவை சேர்ந்த முத்துலெட்சுமி, பொன்னம்மாள், மாரியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதுகுறித்து மாரியம்மாள் கூறும் போது, எங்கள் பகுதியில் 100 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பாதி பேர் சட்டத்துக்கு புறம்பாக மோட்டார் வைத்து அதன் மூலம் குடிதண்ணீர் பெற்று வருகிறார்கள். எனவே மேடான பகுதிக்கு தண்ணீர் வருவது இல்லை. இன்று எங்கள் தெருவுக்கு தண்ணீர் திறந்து 1 மணி நேரம் ஆகி விட்டது. ஆனால் சொட்டு தண்ணீர் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் தெருவை சுற்றி சாக்கடை நிறைந்து காணப்படுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே எங்கள் பகுதி பிரச்சனை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இன்று சனிக்கிழமை என்பதனால் அலுவலகம் விடுமுறை. எனவே அலுவலர்கள் யாரும் வரவில்லை. அலுவலகம் பூட்டியே இருந்தது. பெண்களிடம் செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அவர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இன்று மதியம் அவர்களுடைய பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க படும் என உறுதி கூறிய காரணத்தினால் பெண்கள் கலைந்து சென்றனர்.