தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சேரக்குளத்தை அடுத்த கிளாக்குளத்தை சேர்ந்தவர் ஞானமுத்து. இவருடைய மகன் கவிதன் (25). இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். தற்போது அமுதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கவிதன் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளத்தில் உள்ள தனியார் செங்கல்சூளையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் செங்கல்சூளையில் இவர் மண்ணை பிசைந்து எந்திரத்துக்குள் அனுப்பி விட்டு வெளியே வந்தபோது, அவரது துண்டு கீழே விழுந்தது.
அதனை எடுப்பதற்கு முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக எந்திரத்துக்குள் அவர் தவறி விழுந்தார். இதில் எந்திரத்தில் சிக்கிய அவர், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்சூளை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


