தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் டேங்கர் லாரியில் இருந்த ஆசிட்டை பேய்க்குளம் அருகே உள்ள குளத்தின் கரையில் கொட்டியுள்ளனர். அந்த ஆசிட் கரையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள குளத்தின் தண்ணீரில் பாய்ந்தோடியது. இதனால் குளத்தில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாயர்புரம் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் சந்திரன் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஏஇ ஜோசன் ஆகியோர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட சார்ஆட்சியர் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்தார். மேலும் இந்த குளத்தில் இருந்து தான் கோரம்பள்ளம் விவசாய குளத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். எனவே விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் குளத்து தண்ணீரையும், மண்ணையும் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரனை நடந்து வருகிறது.