தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை காட்டுப்பகுதியில் இரவு ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக சாத்தான்குளம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். தலையில் பலத்த காயத்துடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலிசார் அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலிசார் நடத்திய விசாரனையில் இறந்து கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மகிபாலன்(32) என்பது தெரியவந்தது. இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சென்று வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று இவரின் காரை இரண்டு பேர் வாடகைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். நேற்று இரவு வெகு நேரமாகியும் மகிபாலன் வீட்டிற்கு திரும்பாததால் மீரா தனது உறவினர்களிடம் போன் செய்து கேட்டுள்ளார். ஆனால் இன்று காலை சாத்தான்குளம் போலிசார் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததும், மீரா சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்து தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். இவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் வீச காரணம் என்ன? இவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற 2 மர்ம நபர்கள் யார் என போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


