சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி பிரகாசபுரம் பகுதியில் அதிகாரிகள் திடீரென முகாமிட்டு 3 நாள்களாக கள ஆய்வுப் பணியை மேற்கொண்டதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாத்தான்குளம் மணிநகர் பகுதியில் கடந்த 10 மாதத்துக்கு முன்பு ஒஎன்ஜிசி நிறுவனம் முகாமிட்டு கள ஆய்வை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து அந்நிறுவனம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சங்கரன்குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள முயன்றது. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிறுவனப் பணியாளர்களை முற்றுகையிட்டு, அவர்களது வாகனங்களை சிறைபிடித்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பிரகாசபுரம் விலக்கு பகுதியில் ஒரு நிறுவனம் திடீரென முகாமிட்டு அதன் ஊழியர்கள் கடந்த 3 நாள்களாக கள ஆய்வை நடத்தி வருகின்றனர்.
இதுவும் மீத்தேன் திட்ட ஆய்வாக இருக்கும் என கருதும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப்பிடம் கேட்டபோது, பிரகாசபுரம் விலக்கு பகுதியில் அகில இந்திய சர்வே துறை சார்பில் நில அளவீடு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார் அவர்.