
தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது சலவைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் என். வெங்கடேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
சலவைத் தொழிலாளர்கள் மனு: ஸ்ரீவைகுண்டம் சலவைத் தொழிலாளர் சங்கத் தலைவர் குட்டியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
சலவைத் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த 70 குடும்பத்தினர் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணிகளை சலவை செய்து வருகிறோம். எங்களுக்காக கடந்த 1970 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபராங்குசநல்லூர் சாலைக்கு வடபுறம் 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தில் கிணறு அமைத்து, மின்மோட்டார் வைத்து சலவை செய்வதற்காக 12 அறைகளும், மீதம் உள்ள இடம் சலவை செய்த துணிகளை உலர்த்துவற்கு என சலவை நிலையமும் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சலவை நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அந்த சலவை நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும்.