கொற்கையில் விரைவில் அகழாய்வு துவங்கும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனுவுக்கு தொல்லியல் துறை இயக்குனர் எழுதிய கடிதத்தில் பதில் கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய வேண்டும், 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும், இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. தற்போது மாநில அரசு இங்கு அகழாய்வு செய்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க பணம் ஓதுக்கீடு செய்துள்ளார்கள். 2004 ல் அகழாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் உதயச்சந்திரனுக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா கொற்கை பற்றிய அரிய வரலாற்று விவரங்களை தெரிவித்து, துறையின் மூலமாக உரிய தொல்லியல் வல்லுநர் குழுவினை அனுப்பி தற்போதுள்ள நவீன அறிவியல் முறைப்படி கொற்கையில் அகழாய்வு செய்து அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் மாதிரிகளை சேகரித்து அதனை காலக்கணக்கீட்டுக்குஅனுப்பி கொற்கைஅகழாய்வு அறிக்கையினை வெளியிடுமாறு கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு தொல்லியல் துறை இயக்குனர் சார்பில் துணை இயக்குனர் சிவானந்தம் பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிலில் தொலலியல் துறையின் ந.க. எண் ஈ3/2424/2020- -& 1, நாள் 30.07.2020 ன் படி கொற்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அகரம், மாரமங்களம், ஆறுமுக மங்களம் ஆகிய பகுதிகளில் 2020 &2021 ஆண்டுக்கு தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள உரிய கருத்துரு தயார் செய்து மத்திய தொல்லியல் துறையின் அனுமதிக்கு அனுப்பபட்டுள்ளது. மேற்படி கருத்துருவின் படி மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டவுடன் உடனடியாக தூத்து’ க்குடி மாவட்டம் கொற்கையில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற விவரம் இதன்மூலமாக தெரிவித்து க் கொள்ளப்படுகிறது.
என்று அந்த பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.
வரும் நிதியாண்டில் கொற்கை மற்றும் சுற்றுப்பகுதியில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாநில தொல்லியல் துறை பதில் மூலமாக இப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.