
கொங்கராயகுறிச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்கள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தின் போது பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நகரங்கள், கிராமப்பகுதிகளில் தண்ணீர்பந்தல் திறக்கப்படுவது வழக்கமாகும். இதன்படி இந்தவருடத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தவிர்த்திடும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயகுறிச்சி கிளை சார்பில் கொங்கராயகுறிச்சி பஜார் மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர்பந்தல் திறப்புவிழாவிற்கு, தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் முகமது கலீல், பொருளாளர் ஷேக் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்திக் வரவேற்றார். கிளைத்தலைவர் நாகூர் மீரான் தண்ணீர்பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பழரசம், இளநீர் வழங்கினார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொங்கராயகுறிச்சி வழியாக தெற்குதோழப்பண்ணை பொய்சொல்லாமெய்யர், நடுவக்குறிச்சி பொய்சொல்லாமெய்யன், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா உள்ளிட்ட அப்பகுதியிலுள்ள சாஸ்தா கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்ற பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வழங்கிய குளிர்பானங்களை பக்தர்கள் விரும்பி வாங்கி குடித்து மகிழ்ந்து சென்றது குறிப்பிடத்தக்கதாகும். இதில், கிளையின் துணைத்தலைவர் இஸ்மாயில், மருத்துவஅணி செயலாளர் பாதுஷா, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.