தூத்துக்குடி விமானநிலைத்தில் இருந்து பறக்கும் போதே தாமிரபரணி ஆற்றை நோக்கி பார்த்தேன். அது சிறு புள்ளியாக மாறிக்கொண்டிருந்தது. எனக்கு சன்னல் ஓரத்தில் உள்ள சீட்டை முனைவர் சுதாகர் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டார். விமான பயணம் குறித்து பேசிக்கொண்டே வந்தார்.
நானும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். பணிப்பெண்கள் எங்களுக்கு தேவை என்ன என்று கேட்டு வந்தனர். தண்ணீர் மட்டும் வாங்கி குடித்துக்கொண்டோம். அதன் பின் சன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சிறிது நேரத்தில் வானத்தில் மேக கூட்டத்துக்குள் எங்களது விமானம் சென்று விட்டது. அந்த வேளையில் குவைத்தில் எங்களை அழைத்த தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினை பற்றி அசைப்போட்டேன்.

அதைப்பற்றி சங்க பொருளாளர் சுப்பிரமணியன் அவர்கள் என்னிடம் கூறியதை கண்ணை மூடி அசைப்போட்டேன். இந்த சங்கம் 1999 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. முதல் தலைவராக எ.என்.நடராஜன் என்பவர் இருந்துள்ளார். இந்த சங்கத்தினை பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்படுவார்கள். இவர்கள் பணத்தினை சேர்ந்த்து வைக்க கூடாது. அந்தந்த ஆண்டு திரட்டும் பணத்தினை கொண்டு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்து கொள்ள வேண்டும். அவர்கள் பதவி காலம் முடியும் போது திரட்டிய பணங்கள் அனைத்தையும் செலவு செய்து இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் புதிதாக சந்தைக்கு வரும் பொருள்கள் குறித்தும், அறிவியல், புதுக்கண்டுபிடிப்பு போன்ற விசயங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஜனவரி முதல் டிசம்பர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் செயல்படுவார்கள். இந்த சமயத்தில் வருடந்தோறும் திரட்டுடம் பணத்தினை கொண்டு நிகழ்ச்சி நடத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த ஆண்டு(2024) 25 வது ஆண்டு விழா நடைபெறுகிறது. எனவே சிறப்பாக நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினார் சுப்பிரமணியன். அதை அசைப்போட்டவாறே பயணம் செய்தேன். இதைப்பற்றி முனைவர் சுதாகர் கூறும் போது அவரது நண்பர் பலவேச முத்து போன்ற தொழில் அதிபர்களின் பங்கு இந்த சங்கத்தில் அதிகம் உண்டு என கூறினார்.

மாலை சுமார் 5.45க்கு சென்னை போய்ச் சேர்ந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் எங்களது விமானம் வந்து நின்றது. கீழே இறங்கியவுடன் முனைவர் சுதாகர் என்னை பார்த்தார். இந்த விமானம் அருகே நில்லுங்கள் உங்களுக்கு ஒரு படம் எடுத்து தருகிறேன் என்றார். நானும் இறங்கி தூத்துக்குடி இண்டிகோ விமானத்தின் அருகில் நின்றேன். நாங்கள் வந்த விமானத்துடன் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பின் நாங்கள் பன்னாட்டு விமான நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இறக்கி, அதன் பின் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச் சென்று, உணவு வாங்கி தந்து, கஸ்டம்ஸ் உள்பட அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் என்னோடு இருந்து கடந்து, என்னை குவைத் அழைத்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தார் முனைவர் சுதாகர். என் என்றால் எனக்கு முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் கண்ணை கட்டி காட்டி விடப்பட்டது போலவே உணர்ந்தேன். நல்ல வழிகாட்டி இருந்த காரணத்தினால் பயணம் இனிதே இருந்தது. உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான நிலையம் செல்லும் வழியில் பிரமாண்டமான நகரும் படிக்கட்டுகள் இருந்தன. அதன் வழியாக நாங்கள் இருவரும் சென்றோம். சில இடங்களில் அனுபவ சாலியான முனைவர் சுதாகர் அய்யாவுக்கு கூட சில சந்தேகம் இருந்தது. ஆகவே அவர் ஆங்கிலத்தில் அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டு பயணத்தினை தொடர்ந்தார். ஆங்கில அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.
பல இடங்களில் இதய நோயாளியான என்னை கஷ்டப்படுத்தக்கூடாது என எனது லக்கேஜையும் அவரே சுமந்து சென்றார். நல்ல தோழனாக, சில இடங்களில் என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும் போது நல்ல ஆசானாக, சில இடங்களில் நான் செய்யும் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது தகப்பனாக, சரியான நேரத்தில் உணவு வாங்கி தந்து மாத்திரையை சாப்பிட வேண்டும் என அறிவுருத்தும் தாயாக என்னோடு இருந்தார் முனைவர் சுதாகர். எனக்கு இது மிகப்பெரிய கொடுப்பினையாகும்.
சென்னை விமான நிலையத்தினை பற்றி இவ்விடத்தில் அறிந்துகொள்வது அவசியமாகிறது.
சென்னை பன்னாட்டு விமான நிலையமானது சென்னைக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான விமான நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைத்தில் விமானம் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்த படியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு விமா£னம் நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் விமான சேவை 1915 இல் இயக்கப்பட்டது மற்றும் விமான நிலையம் 1930 இல் தொடங்கப்பட்டது. முதல் விமானம் புஷ்மோத் 1932 ஆம் ஆண்டு இவ்விடத்தில் தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு விமான வாரியம் இந்த விமான நிலைய கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. தற்போது சரக்கு போக்குவரத்து விமானங்கள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் இந்த விமான நிலையம் சேதமடைந்தது. 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையம். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.
இந்த விமான நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது.
ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு விமான நிலையம் என்ற பெயரை பெற்றது. உள்நாட்டு விமான நிலையம் ஏரோ பிரிட்ஜ் எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையமும் இதுவே.
சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம் சென்னை விமான நிலையம் தான். சிறந்த வானூர்தி நிலையம் என்று சென்னை- உள்நாட்டு விமான நிலையம் என்ற விருது குடியரசுத் தலைவரால் பெற்ற விமான நிலையம் என்ற புகழை கொண்டதாக விளங்குகிறது.
சுகாதாரமான இலவசக் குடிநீரை இரு விமான நிலையங்களில் வழங்கிய முதல் நிலையம் என பெருமையை பெற்றது. இந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை யை ஒட்டியே அமைந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும். இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ள மிகச்சிறப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் விளங்குகிறது
இந்த விமான நிலையம் ஆந்திரா , கர்நாடகா , கேரளா , தமிழ்நாடு, ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவிற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் தெற்கு பிராந்திய தலைமையகமாக செயல்படுகிறது. தெலுங்கானா , மற்றும் லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களும் இதனுடன் அடங்கும்
இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து மற்றும் விமான இயக்கங்களில் ஐந்தாவது இடத்தினை பெற்ற விமான நிலையமாகும், இந்தியாவில் கையாளப்படும் சரக்குகளால் நான்காவது இடத்தினை பெற்றது. சர்வதேச போக்குவரத்தில் இது மூன்றாவது இடத்தினை பெற்ற விமான நிலையமாகும். 2023 -24 நிதியாண்டில், விமான நிலையம் 21 மில்லியன் பயணிகளையும் 0.34 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது. இந்த விமான நிலையம் ஆறு மக்கள் வசிக்கும் அனைத்து கண்டங்களுக்கும் பயணிகள் விமானங்களை இணைக்கிறது, மேலும் மூன்று கண்டங்களுக்கு நேரடி விமானங்களை வழங்குகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி , விமான நிலையம் மூன்று இயக்கப் பயணிகள் முனையங்களைக் கொண்டுள்ளது, அவை முறையே 1 மற்றும் 4 உள்நாட்டுப் போக்குவரத்தைக் கையாளுகின்றன . முனையம் 2 சர்வதேச செயல்பாடுகளைக் கையாளுகின்றன.
இந்த விமான நிலையம் 2035 ஆம் ஆண்டிற்குள் 40 மில்லியன் பயணிகளின் உச்ச கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சென்னை மெட்ரோவின் விமான நிலைய மெட்ரோ நிலையம் மற்றும் சென்னை புறநகர் இரயில்வேயின் திரிசூலம் ரயில் நிலையம் ஆகியவற்றால் சேவை செய்யப்படுகிறது .
மிகவும் பெருமையாக இருந்தது. சென்னை விமான நி¬லாயம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற விமான நிலையமாக உள்ளது. இவ்விடத்தில் தான் நாம் வந்து இறங்கியுள்ளோம் என்று நினைக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
இவ்விடத்தினை நான் கட்டுரையாக எழுதும் போது குவைத் மாநகரில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அந்த நிகழ்வை இவ்விடத்தில் வரலாறாக பதிவிடலாம் என நினைக்கிறேன்.

இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2014ஆகஸ்ட் 8 ந்தேதி ஒரு நாள் பயணமாக குவைத் புறப்பட்டு சென்றார். விமான நிலையம் சென்றிறங்கிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு குவைத் பிரதமர் அப்துல்லா அலி அல் யஹ்யா நேரில் சென்று உற்சாக வரவேற்பளித்தார். பின்னர் குவைத் அரண்மனைக்கு சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் பட்டத்து இளவரசர் «-சக் சபா அல் & கலீத் அல் & சபா அல் &அஹ்மத் அல் & முபாரக் அல் & சபாவை சந்தித்து பேசினார். அப்போது பட்டத்து இளவரசருக்கு இந்திய குடியரசு தலைவர் முர்மு, இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் வாழத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்தியா & குவைத் இடையே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நல்லெண்ண உறவுகள் நட்பை பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். என்ற பத்திரிக்கை செய்தி ஒன்றை கண்டேன். குவைத்துக்கும் நமது இந்திய நாட்டுக்கும் இன்று நேற்றே பல ஆண்டுகளாக தொடர்ப்பு உள்ளது. அதைப் பற்றி குவைத் இறங்கியவுடன் நிறைய பேசப்போகிறோம்.
இதற்கிடையில் நாங்கள் ஐந்து மணி நேரம் முன்னதாகவே சென்னை விமான நிலையம் சென்று விட்டோம். எனவே உள்ளே முக்கியமான ஆய்வுகளை முடித்து விட்டு உள்ளே போய் அமர்ந்து விட்டோம். இனி வெளியே வர வாய்ப்பு இல்லை. வெளியே வரவேண்டிய அவசியமும் இல்லை. எல்லா வசதிகளும் உள்ளே இருந்தது. நல்ல கழிப்பறை வசதி மிகவும் சுத்தமாக இருந்தது.
முற்றிலும் குளிலுரட்டப்பட்ட விமான நிலையம். அங்கே நாங்கள் காத்திருந்த இடத்தில் இந்திய உணவு உள்பட பல் நாட்டு உணவு அங்காடிகளும் இருந்தது. சைவ மற்றும் அசைவ உணவுகள் அங்கே இருந்தன. முதல் நேர தொலை தூர விமானப் பயணம். அதோடு மட்டுமல்லாமல் உணவு பிரச்சனையால் வயிறு உபாதை ஏற்பட்டு விடக்கூடாது என சைவ உணவை வாங்கிச்சாப்பிட்டுக்கொண்டேன். எனக்கா க முனைவர் சுதாகர் அவர்களும் சைவ உணவை சாப்பிட்டு கொண்டார்கள். வெளியிடத்தில் சாப்பிடும் பில்லை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. ஆனாலும் வித்தியாசமாக இருந்தது.
நான் அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். முனைவர் சுகாதர் அவர்கள் அந்த விமான முனையத்தினை சுற்றி கிட்டத்தட்ட 25 சுற்று வந்து விட்டார். தினமும் வாக்கிங் செல்வேன். இன்று வாக்கிங் செல்லவில்லை. ஆகவே சுற்றி வருகிறேன் என சுற்றி வந்தார். இறுதியில் விமானத்தில் ஏறும் நேரம் வந்தது. நாங்கள் தயாரானோம்.
சென்னையிலிருந்து இரவு 10.30 மணிக்கு இந்த விமானம் குவைத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. இதுவும் இண்டிகோ விமானம்தான். ஆனால் இந்த விமானம் சற்று பெரியது. சுமார் 200 பயணிகளைத் தூக்கிக்கொண்டு பயணித்தது.
தற்போது நாங்கள் ஏறிய விமானம் ஏர் பஸ் எனும் இண்டிகோ விமானம். தூத்துக்குடியில் நாங்கள் ஏறி விமானத்தினை விட பெரியதாக இருந்தது.
இப்போதும் எனக்கு சன்னல் ஓர இருக்கையை முனைவர் சுதாகர் விட்டுத்தந்தார். ஆர்வ மிகுதியில் ஓடுதளத்தில் இருந்து மேலே விமானம் ஏறும் போது சென்னையை நோக்கி பார்த்தேன். சென்னை மின் வெளிச்சத்தில் மின்னியது. மிகவும் அழகாக இருந்தது. விமானத்தில் எரிந்த சிவப்பு விளக்கு பின்னணியில் சென்னை மாநகரை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
இந்த வேளையில் எல்லோரும் கூறியபடியே விமான பயணத்தில் பயணிகளுக்கு ஏற்படும் தலைசுற்று எனக்கு ஏற்பட்டது.
முகமெல்லாம் வேர்த்தது. கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன். விமானம் வானத்தில் பறந்தது. சென்னை மாநகரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
(குவைத் பயணம் தொடர்கிறது)


