நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண் ணில் செலுத்தப்படுகின்றன. 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததில் புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டி லேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்பது தெரியவந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் குலசேகரப் பட்டினத்தில் 3-வது ஏவுதளம் அமைப்பது தள்ளிப்போனது. இந்த சூழலில்தான், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றதும் இதுகுறித்த ஆலோசனைகள் தீவிரம் அடைந்தன.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: 3-வது ஏவுதளம் எங்கு அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால், புவியியல், பொருளாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ரீதியாக அதற்கேற்ற சிறந்த இடம் குலசேகரப் பட்டினம்தான். ஏனென்றால், உலகிலேயே ராக்கெட் ஏவுவ தற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக் கிறது. ஆனால், குலசேகரப்பட்டி னமோ 8 டிகிரியில் இருக்கிறது.
தவிர, சர்வதேச விண்வெளி விதிமுறைகளின்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் இன்னொரு நாட்டின் பரப்பு மீது பறக்கக் கூடாது. எனவே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தும் இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளின் பரப்பு மீது பறப்பதைத் தவிர்க்க தென்கிழக்கு திசையில் ஏவப்பட்டு, அதன்பிறகு, கிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் ராக்கெட்டின் பயண தூரம் பல ஆயிரம் கி.மீ. அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடுதலாகிறது.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப் பட்டாலும், அதுவும் இந்த சுற்றுப்பாதையில்தான் செல்லும். இருப்பினும் பாதி வழியில் திசை திருப்ப முடியும் என்பதால் பயண தூரம் பலமடங்கு குறையும். பிஎஸ்எல்வி தொலைஉணர்வு செயற்கைக் கோள்களை ஏவுவதற் கான ராக்கெட்கள் 4 எரிபொருள் பேக்கேஜ்களை கொண்டிருக் கின்றன. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது, சுற்றுப்பாதையின் தூரம் குறை வதால் ஒரு பேக்கேஜ் எரிபொருள் தேவையில்லை. இதன்மூலம் ராக்கெட்டுடன் கூடுதலாக 600 கிலோ எடை வரை அனுப்பலாம்.
இதனால், இஸ்ரோவின் வணிகச் செயல்பாடுகளைக் கவனிக்கும் ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். மேலும் 3-வது ஏவுதளம் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக் கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ராக்கெட்டை தொலை இயக்கியால் (ரிமோட் கன்ட்ரோல்) இயக்கும் டிராக்கிங் மையத்தை சேலம் அல்லது ஈரோட்டில் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.