கணபதியா பிள்ளை முடிவு செய்துவிட்டார்.
இந்த பிரச்சனை முழுக்க சுதந்திர போராட்ட தியாகம் தான். இதன் பின்னே யார் இருக்கிறார்.
மேகநாதன் தான்.
அவர் மனதுக்கு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் உறுதி படுத்த முடியவில்லை. காரணம் மேகநாதனை காணவில்லை.
எங்கேயோ இருக்கிறான்.
போலீஸ் கண்ணில் மண்ணை தூவி பட்டு பறந்து விட்டான்.
ஆனால் எங்கோ இருந்து தூண்டி விடுகிறான் . அவன் பின்னால் மிகப்பெரிய கூட்டம் ஒன்று உள்ளது. அது வாலிப கூட்டம். 18 வயதை தொட்டும் தொடமலும், அறிந்தும் அறியாமலும் இருக்கும் கூட்டம்.
அந்த கூட்டம் இளம் கன்று பயமறியாது என்பார்களே அதுபோலவே இருக்கும் கூட்டம் . யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.
சுப்பிரமணியன் உடன் குடியில் இருந்து கொண்டு மேகநாதன் தூண்டி விடும் பணியை செய்கிறான் என்பது கணபதியா பிள்ளைக்கு தெரியவில்லை.
ஆனாலும் இது குறித்து முழு தகவல் அறியும் வரை யாரிடமும் பேசக்கூடாது என முடிவு செய்து கிளம்பினார். அவரும் இந்தியர் தானே. ஆங்கிலேய துரைகளிடம் அடக்கு முறை அவருக்கும் பிடிக்கவில்லை. “பரங்கியர்கள் நமது நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, நம்மவர்களை வேலை வாங்கி கொண்டு, நம்மவர்கள் உழைப்பில் உண்டு கொழுத்து , நம்மையே திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விரட்ட நேரம் வந்து விட்டது. நமது இளைஞர்கள் போராட்டத்தினை வேறு மாதிரி நடத்த ஆரம்பித்து விட்டார்கள். நிச்சயம் வெற்றியும் பெற்று விடுவார்கள். இந்தபரங்கியர்கள் துண்டை காணோம் , துணியை காணோம் என ஓடப்போகிறார்கள்”. என மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
ஆங்கிலேய துரையோ மிகவும் கோபமாக இருந்தனர். நம்மை விரட்டவே திட்டம் போட்டு செயல்படுகிறார்கள். பதனீரில் தேரிக்காட்டு தண்ணீரை ஊற்றுகிறார்கள். ஆகவே தான் அதனுள் மீன் வந்து இருக்கிறது. கணபதியா பிள்ளை எப்படியாவது போராட்ட காரர்களை கண்டு பிடித்து விடுவார். அவர்களை பிடித்து ஜெயிலில் போட்டு விட வேண்டும் என துடியாக துடித்தார்கள்.
ஆனால் அவர்களால் முடிந்ததா?.
இல்லை அதே வேளையில் பல பிரச்சனைகள் பானி கம்பேனியில் பல தரப்பு மக்களால் நடந்து கொண்டே இருந்தது. எனவே இந்த கம்பேனியை முடிவிட்டு, தண்டவாளத்தினை பிரித்து எடுத்துக்கொண்டு ஓடி விடாமல் என்ற முடிவுக்கே நிர்வாகத்தினை வந்தனர்.
‘*****
காலங்கள் கடந்தது.
மேகநாதன் மீது அனைவர் பார்வையும் குறைந்தது. அதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் பல போராட்டம் நடந்தது. ஒவ்வொரு போராட்டமும் வேறு வேறு மாதிரி இருந்தது. எனவே மேகநாதனை போலிசார் மறந்து விட்டனர்.
சப் இன்ஸ்பெக்டர் வீட்டை விட்டு வெளியே வந்தான் மேகநாதன். நேராக சென்று நண்பர்களை பார்த்தான். சுப்பிரமணியன் சொன்னான், “இங்க பாருடே நீ போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சுட்டே. ஆனாலும் போலிசு உன்னை வேவு பார்த்துக்கிட்டுத்தான் இருக்கும் கொஞ்சம் கவனமா இரு”.
அமைதியாக இருந்தான் மேகநாதன்.
“வெள்ளையனை நாம் விரட்டாமல் எப்படி இருக்க முடியும். நம் கண் முன்னே நமது மக்களை விரட்டி அடிக்கிறான். அவனை நாம் பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா?”
“சரி. இன்றைக்கு பூச்சிக்காட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு சென்று மக்களை போராட தூண்டி விடுவோம்”. மேகநாதன் சொன்னதை கேட்டவுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அனைவரும் கிளம்பினர்.
செல்லும் வழியில் பரமன் குறிச்சி என்ற ஊர் இருந்தது.
அந்த ஊரில் ஜவுளிக்கடை நடத்தி வைத்தவர் சுப்பிரமணிய நாடார். இவரும் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தான்.
அவரிடம் மேகநாதன் சென்று பேசிக்கொண்டிருந்தான். “அண்ணாச்சி. இந்தவெள்ளக்கார பயலுவளுக்கு நாம் தக்க தண்டனை கொடுக்கணும். கடல் தாண்டி இங்க வந்து நம்ம மண்ணுல நம்மை அடிமையா நடத்துதானுவ. அந்த வௌங்காத பயலுவளை நாம் சும்மா விடலாமா?”.
சிரித்தார். அதன் பின் அமைதியாகஇருந்தார். நிறைகுடம் ததும்பாது அல்லவா?
அண்ணாச்சி அவர்கள் இருவருக்கும் டீ வாங்கி கொடுத்தார். இருவரும் குடித்தார்கள்.
பூச்சிக்காட்டில் இன்று நல்லதொரு போராட்டத்தினை துவக்க வேண்டும் என்று மேகநாதன் மனதில் கோபம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.
அப்போது தான் ஒருவன் ஓடியே வந்தான்.
அவன் பரமன் குறிச்சி கிராம முன்சீப்பின் தம்பி.
“ஏடேய் சுப்பிரமணி. சப்கலெக்டர் குரோம்பி. அதாண்டே அந்த வெள்ளக்காரன் வசமாக காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டான்”.
“என்னலே சொல்லுத”
“ஆமாலே அவன் பரமன் குறிச்சி காட்டுக்குள்ள ஜீப்ல வந்து கிட்டு இருக்கும் போது ஜீப் ரிப்பேர் ஆயி போச்சுடே. இவன் அனாதை மாரி அங்க ஒத்தையில நிக்கான்” என்றான்.
இவர்கள் முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் காட்ட வில்லை. அண்ணாச்சி ஏதாவது தப்பா நினைச்சிற கூடாது. ஆனால் இன்று அந்த வெள்ளக்காரனை சும்மா விடக்கூடாது என நினைத்தனர்.
இருவரும் எழுந்தார்கள். “அண்ணாச்சி நாம் பூச்சிக்காடு கூட்டத்துக்கு போறோம்”.
அண்ணாச்சிக்கு இவர்களது இளம் ரத்தம் பற்றி நன்கு தெரியும். எனவே மேகநாதனை அருகில் அழைத்தார்.
“ஏடேய் விவரம் இல்லாம சப் கலெக்டர் கிட்ட போய் வம்பு கிம்பு இழுத்து புடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமாக போராடுவோம். மகாத்மா சொன்ன மாதிரி அகிம்சா வழியில சுதந்திரத்தை அடைவோம்” என்றார் சுப்பிரமணிய நாடார்.
தலையசைத்தான் மேகநாதன். ஆனால் கண்கள் சிவந்து இருந்தது.
கடையை விட்டு வெளியே வந்தார்கள். இருவரும் சைக்கிளில் பரமன் குறிச்சி காட்டை நோக்கி கிளம்பினார்கள்.
மேகநாதன் மனதோ வேறு மாதிரி திட்டமிட்டது. இன்றோடு குரோம்பியை முடித்து விட வேண்டும். இது தான் நல்ல தருணம். இனிமேல் வெள்ளக்காரர்கள் வெளியே வரவே பயப்படணும். நம்ம மக்களை சந்திக்க அஞ்சணும்.
மேகநாதன் தனது இடுப்பை தடவி பார்த்தான். அங்கே தயார் நிலையில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.
சுப்பிரமணியன் கேட்டான், “மேகநாதா சைக்கிளை எங்கே விட”
“பரமன்குறிச்சி காட்டுக்குள் விடு” மிக தீர்க்கமாக சொன்னான் மேகநாதன்.
“இன்று குரோம்பியை முடித்துவிட வேண்டும். இங்கிலீஷ் காரனுவளுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும்”. அவன் மனது கொதித்துக்கொண்டிருந்தது.
சுப்பிரமணியன் சைக்கிளை அழுத்த, பின்னால் இருந்த மேகநானுக்கு கோபம் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.
பரமன் குறிச்சி காட்டுக்குள் வந்து நின்றனர்.
அங்கே ஜீப் மட்டும் நின்றது. குரோம்பியை காணவில்லை.
அருகில் ஒருவன் ரோடு மேஸ்திரி வேலை பார்த்துக்கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் பரபரப்பாக வந்து இறங்குவதை கண்டு அவனே இவர்களிடம் வந்தான்.
“என்ன துரையை தேடுதியளா?”
“துரை. பெரிய துரை” மனதுக்குள் மேகநாதனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் மறைத்துக்கொண்டான்.
தலையை மட்டும் ஆட்டினான்.
“துரை வசமாக காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாவுளா. என்ன செய்யன்னே தெரியாம திரு திருன்னு முழிச்சிக்கிட்டு நின்னாவ. அப்ப பாத்து எங்க என்ஜினியர் வந்தாவ. அவிய ஜிப்புல துரையை ஏத்திக்கிட்டு போயிட்டாவ”.
“சே”. சைக்கிள் சீட்டை வேமாக தட்டினான் மேகநாதன்.
“என்ன இப்படி கோப்படுதிய. நீங்க யாரு?” அப்பாவியாக கேட்டான் மேஸ்திரி.
“ம். உங்க அப்பன்”.
கோபத்தில் “சுப்பிரமணி சைக்கிளை ஓட்டுடா” என்றான் மேகநாதன்.
மீண்டும் சைக்கிள் பூச்சிக்காட்டை நோக்கி கிளம்பியது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். அந்த காட்டுக்குள் சைக்கிள் அழுத்தும் போது ஜெயினில் இருந்து வரும் சத்தம் மட்டுமே காற்றை கிழித்துக்கொண்டிருந்தது.
சுப்பிரமணியன் மெதுவாக பேசினான்.
“என்ன மேகநாதன வேறு ஏதாவது திட்ட போட்டு இருந்தீயா?”
“ம்”.
“என்னடே எனக்கு தெரியாம”
“இன்னையோட அந்த பரங்கி தலையன் கதையை முடிக்க திட்டம் போட்டு இருந்தேன்”.
“அடபாவி”.
“நானா பாவி. நம்ம மக்களை அடிமை படுத்துத அவுனுவதான் பாவி”.
“இல்லைடே கூட வருத எனக்கே தெரியாம திட்டம் வச்சிருக்கீயே”.
அமைதியாக இருந்தான் மேகநாதன்.
“இங்க பாருடே. போராடுத தியாகிகளை காப்பாத்த தான் நீ இருக்கே. நீயே கொலை செஞ்சிட்டு கொலை கேசுல உள்ளே போயிட்டனா, போராளிகளை காப்பாத்தி வெளியே கொண்டு வர்றது யாரு. அவனுவ குடும்பத்தை காப்பாத்துறது யாரு”.
மேகநாதன் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
உண்மைதானே.
அவர்களை எப்படி காப்பாற்றுவது.
“அது தான் சொல்கிறேன். நீ தலைமை தாங்கு. போராட்டத்தினை தூண்டி விடு. போராட நாங்கள் இருக்கிறோம். எங்களை வெள்ளைக்காரன் பிடிச்சுகொண்ட போனா எங்களை காப்பாத்து”.
மேகநாதன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“சரி சுப்பிரமணி”.
இருவரும் சைக்கிளில் பூச்சிக்காடு வந்து சேர்ந்தார்கள்.
அங்கே கூட்டம் தயாராக இருந்தது.
பொதுவாக கூட்டம் என்று கூடினால் போலிசு மேப்பம் பிடித்து வந்துவிடும். இங்கே அம்மன்கோயில்கொடை விழா நடந்துகொண்டிருந்தது. எனவே கோயில் கூட்டம் தான் என துரைமாருகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரிடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் மேகநாதன் ஏறி பேச ஆரம்பித்தார். “நம் தேசத் தலைவர்களை யெல்லாம் வெள்ளையரசு அடித்து நொறுக்குகின்றது. நாம் இங்கே விழா நடத்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இனிமேலும் நாம் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. விழித்தெழ வேண்டும்” என்றான். மேகநாதன் பேச்சைக் கேட்ட மக்கள்
“என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர்.
“உங்கள் ஊரில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள காடுகளை வெட்டி அழிக்க வேண்டும்” .
அப்போது சரி என்று சொன்னவர்கள் அனைவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் தனி தனியாக சென்று ஆலோசனை செய்தனர். காடுகளை வெட்டி அழித்தால் போலீசாரால் தொந்தரவு ஏற்படும் . என்ன செய்யலாம். சிலர் அந்த ஊர் கிராம முன்சீப்பிடம் சென்று ஆலோசனைக் கேட்டார்கள்.
அவர், “மேகநாதன் நாட்டின் நலனுக்காகத்தான் சொல்வார். காட்டை வெட்டி அழியுங்கள்” என்றார்.
அடுத்த நிமிடமே ஊர் மக்கள் ஒன்றாக கூடினார்கள். அவர்கள் திட்டமிட்டப்படியே அந்த பகுதியில் அரசு பாதுகாப்பில் இருந்து காடுகளை வெட்டி அழித்தனர். அந்த சமயத்தில் மக்கள் செல்லும் வழியில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. அந்த கள்ளுக்கடையை அடித்து நொறுக்கினர். அதோடு மட்டுமல்லாமல் அந்த கள்ளுக்கடைக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாய் காணப்பட்டது.
மரம் வெட்டும் போராட்டம் பல இடங்களில் பரவியது. ஏரல் அருகில் உள்ள குரங்கணி மக்களும் மரம் வெட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காயாமொழி கிராம முன்சீப் தன்னுடைய தலையாரியை அழைத்தார். “யோவ் பூச்சிக்காடு சம்பவம் குறித்து நீ போய் திருச்செந்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கிட்ட புகார் கொடு” என்றார்.
தலையாரி அங்கிருந்து திருச்செந்தூருக்கு நடைபயணமாக புகார் கொடுக்க கிளம்பினார்.
வெள்ளக்கார அரசுக்கு பெரிய தலைவலியாக போய் விட்டது. எங்கே இருந்து வருகிறார்கள். தீடீரென்று மரத்தை வெட்டுக்கிறார்கள். தந்தி கம்பியை அறுக்கிறார்கள். கள்ளுக்கடையை அடித்து நொறுக்குகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது என்று நினைத்தனர்.
அந்த சமயத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்ட்ர் பெரிய பிள்ளை தலைமையில் போலிஸ் படை குவிக்கப்பட்டது. பெரிய பிள்ளை ஒவ்வொரு இடமாக சென்று விசாரணையில் இறங்கினார்.
அவர் விசாரணையில் தூண்டி விட்டது யார் என்று புரிந்து விட்டது. ஆம் எப்படி விசாரித்தாலும் மேகநாதன் பெயர் வெளிப்பட்டது. அவனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார்.
“ம். நிச்சயம் மேகநாதன் வேலை தான். அவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்”.
அதற்கான நடவடிக்கையில் உடனே இறங்கினார்.
பெரிய பிள்ளை மேகநாதன் தலைமையில் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். அவர்களை பிடிக்க போலீஸ் படையுடன் பூச்சிக்காடுக்கு விரைந்தார்.
அங்கே நின்றவர்களையெல்லாம் அடித்து நொறுக்கினார். மேகநாதன் எங்கே என்று கேட்டு அங்கு நின்றவர்களை அடித்து துன்புறுத்தினார்.
வீடு வீடாக சென்று சோதனை நடத்தினார். வீட்டுக்குள் உள்ள பொருள்களை யெல்லாம் நாசம் படுத்தினார். அந்த பொருளையெல்லாம் தெருவில் தூக்கி வீசினார்.
இவருக்கு பயந்து ஊர் மக்கள் எல்லோரும் ஓடி ஒளிந்தனர். வாலிபர்களை பிடித்து உப்பை தரையில் விரித்து அதன் மேல் முட்டங்கால் போட வைத்தார். புறங்கையை கட்டி வெயிலில் நிற்க வைத்தார்.
தாகத்தில்அவர்கள் தவித்தனர். “தண்ணீ தண்ணீ” என கத்தினர்.
தவித்த வாயுக்கு தண்ணீர் தர மறுத்தார் பெரிய பிள்ளை. சவுக்கால் அவர்களை அடித்தார்.
கண்களை உருட்டிய படியே “மேகநாதனை எங்கே மேநாதனை எங்கே” என்று கேட்டனர்.
ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை.
உப்பு மீது முட்டு போட்ட காரணத்தினால் ரத்தம் சொட்டியது. தண்ணீர் தாகத்தில் மயங்கி விழுந்தனர். ஆனால் அவர்கள் விழுந்தால் அவர்களுக்கு சவுக்கடி விழுந்தது. எனவே அரை மயக்கத்தில் அனைவரும் முட்டுப்போட்டபடியே நின்றனர்.
வைராக்கியம். சுதந்தரம் வேண்டும் என்ற வைராக்கியம். அவர்கள் முட்டு பகுதியில் இருந்து வடிந்த ரத்தம் கூட மன கஷ்டத்தினை வரவழைக்கவில்லை.
குரங்கணியில் மரம் வெட்டும் வழக்கும் சூடு பிடித்தது. இதில் 26 பேர் மீதுவழக்கு பதிவு செய்து போலிசார் விரட்டினர். இதில் சங்கரநாடார் என்பவரின் வீடு சூறையாடப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருள்களை யெல்லாம் தெருவில் கொண்டு போய் கொட்டினர். இவர் வீட்டில் பல்வேறு விலை உயர்ந்த பொருள்களை வைத்திருந்தார். அதையெல்லாம் தூக்கிச் சென்று விட்டனர். இதனால் பல பொருள்களை இழந்து அவரின் குடும்பத்தார் தவித்தனர். இதுபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு இருந்தது. ஆனாலும் திடமான மனதுடன் வெள்ளைக்காரர்களை எதிர்க்க உறுதியாக இருந்தனர்.
அதே வேளையில் போலீஸ் தாக்குதலால் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். மரம் வெட்டு வழக்கு, கள்ளுகடை சூறையாடிய வழக்கு மேகநாதன் மீது தொடுக்கப்பட்டது. இதனால் பலரும் ஓடி ஒளிந்தனர். தேரிக்காடே கதி என கிடந்தனர். அவர்களுக்கு உணவு கொண்டு செல்பவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பின்னால் சென்று கைது செய்ய திட்டமிட்டனர் போலிசார். ஆனால் அந்த போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பித்தனர் விடுதலை போராட்ட வீரர்கள்.
குற்றவாளிகளை தப்பிக்க விட்ட போலிசார் மேகநாதனை சும்மா விடாது. இது தான் சமயம் என தூக்கி கொண்டு போய் விடும் என நினைத்தார்கள். .
மேகநாதனோ இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. எப்படியும் போலிசாரிடம் இருந்து தப்பித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டினான்.
பூச்சிக்காட்டில் இருந்து ஏரலுக்கு தப்பி ஓடியவன். அங்கே நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. போலிசார் இங்கே இருந்தால் பிடித்து விடுவார்கள் என்பது புரிந்தது. எனவே அங்கிருந்த தாமிரபரணி காட்டுக்குள் மறைந்து கிடந்தார் மேகநாதன்.
இதற்கிடையில் பூச்சிக்காட்டில் மேகநாதனுக்கு மிகவும் உதவியாக இருந்து தையல் கடை நடத்தி வந்த சுந்தரலிங்க தேவரை கைது செய்தனர்.
அவரிடன் மேகநாதன் இருக்கும் இடத்தினை கேட்டு கொடுமைகள் செய்தனர்.
நகத்தினுள் ஊசியை செலுத்தினர்.
ஆனால் அவரோ எனக்கு எதுவுமே தெரியாது என மறுத்து விட்டார். அவருக்கு உணவு , தண்ணீர் எதுவும் தாராமல் கொடுமை படுத்தினர்.
இந்த வேளையில் தலைமறைவாக திசையன் விளைக்கு வந்து விட்டான் மேகநாதன்.
ஒவ்வொரு இடத்திலும் போலிசார் மோப்பம் பிடிக்க ஒவ்வொரு கைகூலிகளை வைத்திருந்தனர். அதன் படி மேகநாதனுக்கு பிடிக்காதவர்கள் பலர் போலிசுக்கு உதவி செய்து வந்தனர்.
திசையன் விளை சந்தைக்கு வந்த மேகநாதன் சந்தைக்குள் சென்றான். அப்போது அங்கிருந்த காவலாளி அவனை பார்த்து விட்டான்.
எப்படியாவது மேகநாதனை பிடித்து போலிசிடம் கொடுத்து விட வேண்டுமென திட்டமிட்டான். அதன் படி தன்னோடு உதவி காவலாளியை வாயிலில் காவலுக்கு வைத்து விட்டு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பெரிய பிள்ளையை தேடி போனான்.
பெரியபிள்ளை இவன் பேச்சை கேட்டு உற்சாகம் அடைந்தார். நீ சொல்லுவது உண்மைதானா? திசையன் விளைக்கு போனால் அவனை பிடித்து விடலாமா?
“நிச்சயமாக அவனை பிடித்து விடலாம். இப்போது கூட அவன் வெளியே போய் விடக்கூடாது என காவலுக்கு ஆள் வைத்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். நீங்கள் வந்தால் உடனே பிடித்து விடலாம்”.
ஒரு பெரிய போலீஸ் படையுடன் திசையன் விளை சந்தையை சுற்றி நின்றார் பெரிய பிள்ளை.
சந்தையை சுற்றி எந்த வழியாகவும், எவனும் தப்பித்து செல்லமுடியாத அளவுக்கு சுற்றி வளைத்து விட்டனர்.
உதவி காவலாளியிடம் “மேகநாதன் வெளியே போய் விட்டானா?” என கேட்டனர்.
“அவன் இல்லை” என உறுதியாக கூறிவிட்டான்.
மேகநாதன் சிக்கி விட்டான் என்று முடிவு செய்தனர்.
சந்தையை சுற்றி காவலாளிகள் நிற்க , முன் பகுதியில் 10 கவலாளியை நிப்பாட்டி விட்டு பெரிய பிள்ளை , ஒரு காவலாளியை கூட்டிக்கொண்டு சந்தைக்கு உள்ளே சென்றார்.
சல்லடை போட்டு தேடினார்கள். காய்கறி சந்தை, பழச்சந்தை ,வெங்காய குடோன் என பலதரப்பட்ட கடைகளில் தேடினார்கள்.
எங்கேயும் மேகநாதன் கிடைக்க வில்லை.
காவலாளிக்கோ வருத்தம். எனக்கு தெரிந்து சந்தைக்குள் வந்தான். ஆனால் நமது கண்ணில் மண்ணை தூவி விட்டு எங்கோ சென்று விட்டான். எங்கே சென்று இருப்பான். எப்படி தப்பித்து இருப்பான். யாராலேயும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சர்க்கிள் பெரிய பிள்ளை காவலாளியை முறைத்துப்பார்த்தார்.
“ஏலே நீ மேகநாதனை பாத்தியா?”
“பாத்தேன் எஜமான்”.
“பொய் சொல்லதாலே”
“இல்லை எஜமான் என் இரண்டு கண்ணாலேயும் பார்த்தேன்”.
“பொறவு எங்கலே அவன் போய் ஒளிஞ்சான்”.
காவலாளிக்கு புரியவில்லை.
மேகநாதனோ. பனை ஏறும் தொழிலாளி போல மாறினான். தனது சட்டையை கழற்றி ஒரிடத்தில் வைத்து விட்டு, அழுக்கு வேஷ்டி ஒன்றை எடுத்து தார்பாய்த்த உடுத்துக் கொண்டான். கருப்பட்டி கொண்டு செல்லும் நார் பெட்டியை இடுப்பில் வைத்துக்கொண்டான். பெரிய சும்மாடு ஒன்றை கட்டி, அதன் மேல் பெரிய புல் கட்டு ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த புல்கட்டு முகம் தெரியாத அளவுக்கு இருந்தது.
சந்தையை விட்டு வெளியே வந்தவர்களை போலிஸ் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். காவலாளியும், சர்க்கிள் பெரிய பிள்ளையும் அதை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வேளையில் புல்கட்டை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு அங்கே வந்தான் மேகநாதன்.
செருப்பு போடாத கால் , தார் பாய்த்த வேஷ்டி, திறந்த மார்பு, இடுப்பில் நார் பெட்டி, தலையில் கனத்த புல்கட்டு. இதை கண்டவுடனே சர்க்கிள்தான் சொன்னார்.
“ஏலேய் அந்த பனையேறி கஷ்டப்பட்டு சுமந்துகிட்டு வாறான். அவனை மறைக்காம விடுங்க” என்றார்.
காவலாளிகள் அவனுக்கு வழிவிட எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் மேகநாதன் அங்கிருந்து வெளியே வந்தான். திசையன் விளையில் இருந்து கிளம்பி அருகில் உள்ள வாழைத்தோட்டம் ஊர் வரை நடந்து வந்தவன், அதன் பின் புல்லு கட்டை சாலை ஓரத்தில் போட்டுவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்.
சந்தைக்குள் இருந்து ஒருவன் வெளியே வந்தான். சர்க்கிள் இன்ஸ்பெக்டரை பார்த்தான். “யாரைதேடுதிய அய்யா” என்று கேட்டான்.
பெரிய பிள்ளை முறைத்தார். “உனக்கு தெரிஞ்சு என்ன ஆவ போவுது”.
“இல்லை மேகநாதனை தேடுதியளோ”ன்னு நினைச்சேன்.
பெரிய பிள்ளை திகைத்தார். “ஆமாம் அவனைத்தான் தேடுதோம்”.
“அய்யோ. அய்யோ அவன் தானா?. நான் சந்தேகப்பட்டது சரித்தான். என்னடா உள்ள வெள்ளையும் சொள்ளையுமா வந்தவன். தீடீருன்னு பனையேறி மாதிரி மாறி புல்லு கட்டை சுமக்கானேன்னு நினைச்சேன். சரியா போச்சு”.
“என்னலே சொல்லுத”.
“அட போங்க எஜமான். உங்க முன்னால புல்லுக்கட்டு தூக்கிட்டு போனானே. அதான் நீங்க கூட அவனை விடுங்கன்னு சொன்னீயளே. அந்த பயத்தான் மேகநாதன்”.
“எலே என்ன சொல்லுத”.
“ஆமாம் எஜமான். அது தான் இடுப்புல நார் பெட்டியை வச்சிக்கிட்டு போனானே. அந்த பயத்தான்”.
“கான்ஸ்டபுள். உடனே ஜீப்பை எடுங்க”.
மறுநிமிடம் போலிஸ் கூட்டம் ஜீப்பை நோக்கி ஓடி வர. ஜீப் வாழைத்தோட்டம் நோக்கி சிட்டாய் பறந்தது.
வாழைத் தோட்டம் ஊருக்கு செல்லும் வழியில் மேகநாதன் கொண்டு சென்ற நார் பெட்டியும் . புல்லு கட்டும் கிடந்தது.
போலீஸ் ஜீப் நின்றது. அனைவரும் இறங்கினார்கள். அங்கே கிடந்த நார்பெட்டியை பார்த்தார்கள். அருகில் கிடந்த புல்கட்டை பார்த்தார்கள்.
“சே”. பெரிய பிள்ளை புல் கட்டை ஓங்கி உதைத்தார்.
எங்கு சேன்றான் மேகநாதன்.
யாராலே«யும் கண்டு பிடிக்க முடியவில்லை.
மறு நாள் பத்திரிக்கையில்
“மேகத்துக்குள் மறைந்தான் மேகநாதன்” என தலைப்பு செய்தி வந்ததது .
ஆங்கிலேய அதிகாரிகள் திக்கு முக்காடிபோய் விட்டனர். இனி மேகநாதனை சும்மா விடக்கூடாது . என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு அவன் பல மாதங்கள் வெளியே தலை காட்டவே இல்லை. அவன் சப் இன்ஸ்பெக்டர் தாணுலிங்கம்வீட்டுக்கு சென்று தலைமறைவாகி விட்டான்.
எங்கு தேடியும். அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. போலீசுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது.
******
காலங்கள் கடந்தது. மேகநாதன் இல்லாமல் ஒரளவு சகஜ நிலைக்கு வந்தது அந்த பகுதி. ஆனால் மேகநாதனால் சும்மா இருக்க முடியவில்லை.
மீண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டான் .
இப்போது இவன் தலைமையில் ஏகப்பட்ட இளைஞர்கள் பட்டாளம் தயாராகி விட்டது. அவர்களுக்கு உணர்ச்சி யூட்டி சுதந்திர போராட்ட வேள்வியில் இறக்கி விட்டான் மேகநாதன்.
மேகநாதனின் குரலுக்கு அடிமையான பலர் அவர் தலைமையில் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த சமயத்தில் தான் ஒரு பெரிய பொதுக்கூட்டதுக்கு மேகநாதன் ஏற்பாடு செய்தான்.
அந்த பொதுக் கூட்டம் நடைபெற உடன்குடி பஜாரில் நேரம் குறிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான வாலிபர் திரண்டனர். புதிதாக வந்திருக்கும் போராட்ட காரர்களுக்கு ஆங்கிலேயர்களின் அடக்கு முறை புரிய வேண்டும். அவர்கள் இந்தியர்களை எப்படி அடக்குகிறார்கள் என்பது புரியவேண்டும்.
ஆகவே ஒரு வித்தியாசமான திட்டம் ஒன்றை தீட்டினான் மேகநாதன்.
அதன் படி பொதுக்கூட்டம் நடைபெறும் நாளான்று கடை யடைப்பு நடந்த வேண்டும் என இளைஞர்கள் முடிவு செய்தனர்.
உடன்குடி பகுதியில் ஒவ்வொரு கடையாக சென்று கடைகளைஅடைக்க வைத்தார்கள்.
பெரும்பாலான ஆதரவு மேகநாதனுக்கு கிடைத்தது. ஒரு சிலர் ஆதரவு தரவில்லை. கிறிஸ்தியா நகரைத்தினை சேர்ந்த சாமுவேல்நாடார் மகன் ஈசாக்-கு நாடார் கடையை அடைக்க மறுத்தார்.
“ஏய் ஈசாக்கு கடையை அடை. நமது எதிர்ப்பை நாம் பரங்கியனுக்கு காட்டவேண்டும்”.
“ஏய் மேகநாதா. உன் பருப்பு இங்கே வேகாது. நான் ஏன் கடையை அடைக்க வேண்டும். ஆங்கிலேயன் நமக்கு நல்லது தான் செய்கிறான். ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் கட்டித்தருகிறான். சர்ச் கட்டித்தருகிறான். அவனால் நமக்கு நன்மைதானே நடக்கிறது. அவன் ஏன் நமது நாட்டை விட்டு போகவேண்டும்”.
“அதற்காக அடிமை வாழ்க்கை வாழப்போறியா?”
“அடிமை வாழ்க்கை ஏன் வாழப்போகிறோம். குருகுல வழக்கம் முறை நீங்கி ஊருக்கு ஊரு பள்ளிகளை திறந்து வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான் அவர்களை நாம் ஏன் விரட்டி அடிக்க வேண்டும். முடியாது. அவர்களை எதிர்க்க முடியாது”.
மேகநாதன் கண்கள் சிவந்தது.
“இங்கே பார் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாம நம்மவர்களிடம் நாகரீகம் கற்று தந்தவர்கள் அவர்கள். பள்ளிகளையும் ஆலயங்களையும் தந்தவர் அவர்கள். மெய் ஞானம் அறியாம இருந்த நமக்கு மெய் ஞானம் கிடைக்க அருளியவர்கள் ஆங்கிலேயர்கள்”.
“அடேய் விதண்ட வாதம் வேண்டம். அடைக்க முடியுமா? முடியாதா?”
“முடியாது. நீ என்ன செய்வே”
இருவருக்கு வாக்குவாதம் நீடித்தது.
முடிவில் ஈசாக்கு தன் வசம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மேகநாதன் மார்பில் வைத்தான்.
கூடி இருந்த இளைஞர்கள் அதிர்ந்தனர்.
(குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்)


