
சென்னை சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துமாலை. இவருடைய மகள் அனுவித்யா(24). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர். ராஜகீழ்ப்பாக்கத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
அனுவித்யா எம்.எஸ்.சி சைக்காலஜி படித்தவர். மந்தைவெளியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மராத்தான், நீச்சல், சைக்கிளிங் உள்பட பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்ட இவர் முதியோர்களுக்கு உதவி செய்யும் பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் குரங்கணி பகுதியில் மலையேற்றம் முடிந்து கீழே இறங்கி கொண்டிருந்த போது செல்போனில் தனது தாயாரிடம் பேசி மாலைக்குள் கீழே இறங்கி விடுவோம் எனக் கூறியுள்ளார். அதன்பிறகு காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றக் குழுவினர் சிதறி ஓடியபோது அனுவித்யாவம் உயிரை காப்பாற்ற மலையில் மேல் பகுதியில் தீ பரவாத இடத்திற்கு தப்பி சென்றுள்ளார். இதன்பிற தான் பாதுகாப்பாக இருப்பதாக அன்றிரவு 8 மணிக்கு மலையேற்ற குழுவில் இருந்த தனது தோழிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்காததால் அனுவித்யா உயிர்தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நாலாபுறமும் காட்டுத்தீ பரவியதால் தப்பிக்க முடியவில்லை. இதில் சிக்கி 90 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய அனுவித்யாவை மீட்பு குழுவினர் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.