கருங்குளம் அருகே கிளாக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தினை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தீடீரென்று ஆய்வு செய்தார்.
ஆழ்வார்திருநகரியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கட்டிடம் கடந்த 28ந் தேதி இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள், 1 ஆசிரியை காயமடைந்தனர். இதனால் பல்வேறு தனியார் பள்ளிகளை தூத்துக்குடி மாவட்டத்து தாசில்தார்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளம் இந்து ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்தார்.
அப்போது மோசமாக இருந்த இரண்டு கட்டிடத்தினை உடனே இடிக்க வேண்டும் என நிர்வாகத்தாரிடம் கேட்டுக்கொண்டார்.
கிளாக்குளம் இந்து ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளி கடந்த 1952 ல் துவங்கப்பட்டது. இங்கு தற்போது 83 மாணவர்கள் படிக்கிறார்கள். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 2 ஆயா, 1 சத்துணவு அமைப்பாளர் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியை கிளாக்குளம் இந்து ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளி கமிட்டியினர் நடத்தி வந்தனர். இந்த கமிட்டி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு களைக்கப்பட்டு விட்டது. எனவே பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நேரடியாக சம்பளம் வழங்கி வருகிறது. இதற்கிடையில் இந்த பள்ளியில் உள்ள ஐந்து கட்டிடத்தில் இரண்டு கட்டிடம் மிக மோசமாக உள்ளது.
இந்த நிலையில் மோசமான கட்டிடத்தினை இடித்து விட்டு புதிதாக நிர்வாகம் கட்டிடம் கட்ட நிர்வாகத்தினை£ல் இயலாது. எனவே அரசு தலையிட்டு இந்த பள்ளி கட்டிடத்தினை புதிதாக கட்டி தரவேண்டும் என கிளாக்குளம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்பின் அங்கு இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினை ஆய்வு செய்தார். அங்கன்வாடியில் படித்த குழந்தைகளை சங்க கட்டிடத்தில் வைத்திருந்தனர். அந்த கட்டிடமும் வலுவிழந்து உள்ளது. எனவே விரைவில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவருடன் கருங்குளம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் உடன் வந்தார்.