தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக உதவி ஆய்வாளர், வழக்குரைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர் சு. பெரியசாமி (47). சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரான இவர், பூச்சிக்காட்டைச் சேர்ந்த ஒருவரின் நிலப் பிரச்னை தொடர்பாக, தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளிக்கச் சென்றாராம். காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரத்திடம் மனு அளித்ததுடன் அதற்கான ரசீது தருமாறு பெரியசாமி கேட்டபோது, தான் கூறியவாறு எழுதி வந்தால் மட்டுமே அதற்கான மனு ரசீது தருவதாக உதவி ஆய்வாளர் சுந்தரம் தெரிவித்தாராம்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் சேவியர் சுதாகர் தலைமையில், வழக்குரைஞர்கள் சிவபாலன் உள்ளிட்ட சில வழக்குரைஞர்கள்காவல் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து, சாத்தான்குளம் டிஎஸ்பி பாலச்சந்திரன், நாசரேத் காவல் ஆய்வாளர் ரேணியஸ் ஜெசுபாதம், மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளர் மீனா ஆகியோர் தட்டார்மடம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்குரைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே, காயமடைந்த உதவி ஆய்வாளர் சுந்தரம், வழக்குரைஞர் பெரியசாமி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருவரும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின்பேரில், இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.