சாத்தான்குளம் வட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட செங்குளம், விராக்குளம் மற்றும் சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை மறைவு பிரதேசமான சாத்தான்குளம் வட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் மிகவும் வறண்ட பகுதியாக காட்சியளிக்கிறது.
இப்பகுதியின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மழை மற்றும் மணிமுத்தாறு அணை பாசனத்தை நம்பியுள்ள மக்கள் மழை பெய்யாத காலங்களிலும், மணிமுத்தாறு அணையில் தண்ணிர் திறக்காத காலங்களிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். விவசாயம் பாழ்படுவதுடன், கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
எனவே, சாத்தான்குளம் வட்ட பொதுமக்களின் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் அதிக அளவு உபரி நீர் செல்லும் பாதையாக உள்ள செக்கால் ஓடையில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமம் செங்குளம் மற்றும் கருங்கடல் கிராமம் விராக்குளம் பகுதியில் காட்டாற்று ஒட்டத்தை தடுத்து நிறுத்தி, தண்ணீரை சேமிக்க தடுப்பணை அமைக்க வேண்டும்.
இப்பகுதியில் தடுப்பனை கட்டப்பட்டால் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், மீரான்குளம், கோமானேரி, கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமங்களை உள்ளடக்கிய 40 ஊர் மக்கள் பயன்பெறுவர்.
இதேபோல் சாத்தான்குளம் கருமேனி ஆற்று மேல்நிலை பாலம் முன்னும் தடுப்பணை கட்ட வேண்டும். இந்த இடங்களில் தடுப்பணை கட்டும்போது இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு அதிகளவில் பயன்படுத்திட வாய்ப்பு உள்ளது.
சாத்தான்குளம் வட்டத்தில் சுண்ணாம்பு பாறைகள் அதிகம் உள்ள காரணத்தினால், குடிநீரிலும் சுண்ணாம்பு படிந்துள்ளதாக வும், இதன் காரணமாக இந்த நீரை பருகும் மக்களுக்கு சிறுநீரக நோய்கள் அதிகளவில் தாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தடுப்பனை அமைக்கப்பட்டு நீர் சேமிக்கப்படும்போது, குடிநீர் தன்மை மாறி, மக்கள் சிறுநீரக நோய் பாதிப்பிலிருந்து காக்கப்படுவர்.
எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மேற்கூறிய பகுதிகளிலும், கருமேனி ஆற்றில் வனத்துறை அலுவலகம் அருகிலும் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.