ஆடிபெருக்கை முன்னிட்டு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் பெண்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் பக்தபேரவை சார்பில் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். அதே போல் இந்த வருடமும் பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சாரதா கல்லூரி செயலாளர் அம்பா தலைமை வகித்தார். இதில் ஏரளாமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி கரையில் சிவலிங்கம் வைத்து அதற்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின் பெண்கள் தாமிரபரணி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று பட்டுபுடவை, பூ, உள்பட பொருள்களை படையலாக படைத்து வைத்து ஆற்றில் விட்டனர். அதன் பின் நதிக்கு ஆராதனை செய்து பூ தூவி, கற்பூரம் காட்டி வழிப்பட்டனர்.
அதன் பின் சுமார் 200க்கு மேற்பட்ட பெண்கள் வரிசையாக நின்று தீபம் ஏற்றி தாமிரபரணியில் விட்டு வழிபட்டனர். கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜை ஏற்பாடுகளை கண்ணன் குணசேகர பட்டர் செய்திருந்தார். சிறப்பு சொற்பொழிவை காந்தியம்மாள் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் பக்தபேரவை செய்திருந்தது.


