
கருங்குளம் கவுன்சில் வார்டு பிரிப்பதில் குளருபடி உள்ளதாக முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகம் முழுவதும் வார்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல குளருபடிகள் உள்ளன என்று ஆங்காங்கே மக்கள் புகார் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற பிரச்சனை உள்ளது. இதனால் முறைப்படி எழுதி புகார் மனு கொடுங்கள் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏவும், தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவும் பொதுமக்களிடம் கோரியிருந்தனர்.
இதற்கிடையில் கருங்குளம் ஒன்றியத்தில் கடந்த முறை 13, 15, 16 ஆகிய மூன்று வார்டுகள் முறையே 13 கருங்குளம் பஞ்சாயத்தாகவும், 15 வது வார்டு வல்லகுளம், தாதன்குளம் பஞ்சாயத்தினை சேர்த்தும், 16 வது வார்டு கால்வாய், தெற்குகாரசேரி ஆகிய பஞ்சாயத்து சேர்ந்தும் வரை முறைப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த 20 வருடகாலமாக இதுபோன்றே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த மூன்று பஞ்சாயத்தினையும் பல துண்டுகளாக பிரித்து மற்றொரு பஞ்சாயத்தில் சேர்த்து குளறுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார் அளித்து உள்ளனர்.
இதுகுறித்து 15 வது வார்டு முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் கோபால் கூறும் போது, எங்கள் வார்டில் முன்பு வல்லகுளம் மற்றும் தாதன்குளம் பஞ்சாயத்துகள் இருந்தது. எனவே நலத்திட்ட உதவிகள் பெரும் போது எங்களுக்கு எந்தவொரு குழப்பமும் இருக்காது. கவுன்சிலர் என்ற முறையில் நாங்கள் பஞ்சாயத்து முழுவதும் சுற்றி வரலாம். தற்போது வல்லகுளம் பஞ்சாயத்தில் பாதியை பிரித்து தெற்குகாரசேரி பஞ்சாயத்திலும், மீதியை பிரித்து கால்வாய் பஞ்சாயத்திலும் சேர்த்துள்ளனர். இதனால் நாங்கள் சுமார் 4 கிலோ மீட்டர் கடந்து சென்று தான் பஞ்சாயத்து அலுவலகத்தினை சந்திக்க நேரிடம். இதுவேண்டும் என்றே மக்களுக்கு கிடைக்க கூடிய நலத்திட்டங்களை தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன். எனவே எங்களுக்கு பழைய மாதிரியே நலத்திட்டங்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.
கருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்கிருஷ்ணன் கூறும் போது கருங்குளம் பஞ்சாயத்து மிகப்பெரிய பஞ்சாயத்து. முன்பு ஒரே பஞ்சாயத்து ஒரு கவுன்சிலராக இருந்தது. எனவே 1 கிலோ மீட்டர் சுற்றளவில் நலத் திட்டங்களை பெற்று விடலாம். தற்போது கருங்குளத்தில் ஒரு சில வார்டுகளை பிரித்து மிகச்சிறிய பஞ்சாயத்தான தெற்கு காரசேரி பஞ்சாயத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். இங்கு செல்ல நாங்கள் நான்கு கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டியது உள்ளது. மிக குழப்பான நிலையில் மக்கள் நலத்திட்டங்களை கிடைக்கவிடக்கூடாது என்பதற்காகவே இது போன்று வார்டு பிரித்துள்ளனர் என கூறினர்.
கருங்குளம் ஒன்றிய ஆணையாளரிடம், மாவட்ட ஆட்சி தலைவரிடம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதனிடமும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ விடமும் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.