கருங்குளம் அருகே காலையில் நடந்த விபத்தில் அரசு பஸ் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த கணவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மனைவி படுகாயமடைந்தார்.
காயல்பட்டணம் சதுக்கை தெருவை சேர்ந்தவர் புகாரி. இவரது மகன் எஸ்.எம்.பி. முகம்மது அப்துல் காதர்(35). இவரும் இவரது மனைவி பாத்து முத்து ஜெகரா(32) ஆகிய இருவரும் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆம்னி காரில் வந்து கொண்டிருந்தனர். கருங்குளம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சுப்பையா மகன் முருகேசன்(48) ஓட்டிவந்தார். பஸ்ஸில் 48 பயணிகள் இருந்தனர். அரசு பேருந்தும் ஆம்னி காரும் கருங்குளத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் முகம்மது அப்துல் காதர், பாத்துமுத்து ஜெகரா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்கைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முகம்மது அப்துல் காதர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
காலை 6.45க்கு விபத்து ஏற்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றது. செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், பெஞ்சமின், கோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு போக்குவரத்தினை சீர் செய்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.