
கருங்குளத்தில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
தாமிரபரணி பாசனம் 7வது அணைக்கட்டான, மருதூர் அணைக்கட்டு மேலக்கால்வாயில் உள்ள குளம் தூதுகுழி குளம். கருங்குளம் அருகே உள்ள தூதுகுழி குளத்தில் வருடந்தோறும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் பயிரிடுவார்கள். மார்ச் மாதம் இறுதியில் தண்ணீர் குறைந்தவுடன் வெள்ளரிக்காய் பயிரிடும் பணி துவங்கும். ஆனால் இந்த ஆண்டு மழை பருவம் கடந்து பெய்த காரணத்தினால் மார்ச்சு மாதம் குளம் நிறைந்தே காணப்பட்டது. எனவே இக்குளத்தில் வெள்ளரிக்காய் பயிரிட முடியவில்லை. ஆகவே ஏப்ரல் மாதம் வயல்களில் விளைந்த வெள்ளரிக்காயை நெல்லை திருச்செந்தூர் மெயின்ரோட்டில் வைத்து விற்று வந்தனர்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து கூறும் போது, கடந்த வருடம் தண்ணீர் நிறைந்த காரணத்தினால் தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் பயிரிடப்படவில்லை. முற்காலத்தினை விட இந்த வருடம் கருங்குளம் தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் பணி காலதாமதாமாகத் தான் துவங்கியது. மே மாதத்தில் தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் விதைக்கும் பணி துவங்கியது.
அதே வேளையில் கூடுதல் இடத்தில் வெள்ளரிக்காய் பயிர் செய்து வருகிறார்கள். எனவே தான் குளத்தில் அடர்ந்துள்ள செடிகொடிகள் எல்லாம் தூர்வாரப்பட்டு குளம் சுத்தமடைந்துள்ளது. தற்போது வெள்ளரிக்காய் விளச்சலுக்கு வந்துள்ளது. இக்குளத்தில் விளையும் வெள்ளரிக்காய் சுவையாக இருப்பதால் தற்போது விற்பனை அமோகமாக இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு பழைய காலங்களை விட விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ளரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் கோடை மழை பெய்த காரணத்தினால் வெள்ளரிக்காய் விவசாயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து வியாபாரிகள் வெள்ளிக்காயை உடனே பறித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு கார் சாகுபடிக்காக ஜுன் மாதம் 1 ந்தேதி தண்ணீர் திறக்கவில்லை. எனவே சாகுபடியாளர் மகிழ்ச்சியுடன் வெள்ளரி விவசாயம் செய்து வருகிறார்கள். என்றார்.
எனவே இந்த ஆண்டு சுவையான கருங்குளம் தூதுகுழி குளத்து வெள்ளரிக்காயை தொடர்ந்து அனுபவிக்கலாம் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.