006. பல எழுத்தாளர்களை உருவாக்கும் நெல்லை கவிநேசன்
கடந்த 35 வருடங்களாக என்னோடு பயணிக்கும் எழுத்தாளர் நெல்லை கவிநேசன்.. பயணிக்கும் என்பதை விட என்னைப் பயணம் செய்ய வைத்தவர் என்று கூறினால் மிகையாகாது. சட்டமன்ற உறுப்பினரின் மகனாய் பிறந்து, மிகப்பெரிய கல்லூரியான திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தாலும் எழுத்தை மட்டும் நேசித்து வருபவர். தேவி வார இதழில் பொ.ம .ராஜா மணி அவர்களின் கட்டுரையைத் தொகுத்துத் தந்தவர் அதன் பின் பல்வேறு புத்தகங்களை தொகுக்க ஆரம்பித்தார். நெல்லை தினகரன், தமிழ் முரசு மலர்களின் நிரந்தர தொகுப்பாளராக இருந்தபோது தான் என்னை எழுத்தாளராய் தலைகாட்ட வைத்தார். அதன் பின் நம்பிக்கை நட்சத்திரமாய், மாணவர்களின் கல்வி வழிகாட்டியாக 50 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். தற்போது நெல்லை கவிநேசன் டாட் காம் மூலமாகத் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரையும் தன்னுடைய டாட்காமில் அறிமுகப்படுத்தி வருகிறார். எழுத்தை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தினத்தந்தியில் தொடர் எழுத வைத்து என் எழுத்துக்கு மறு வாழ்வு தந்தவர். தற்போது ஆதித்தனார் கல்வி நிறுவனங்களுக்குச் செயலாளராகப் பயணித்தாலும் கூட எழுத்து துறை ஆர்வத்தினை விட்டு விடவில்லை. இவரிடம் தான் காலம் தவறாமையை கற்றுக் கொள்ளவேண்டும். இவரிடம் நேர்த்தியாக ஆடை அணிவதை கற்றுக்கொள்ளவேண்டும். இவரிடம் தான் அடுத்தவர்களை உயர்த்தும் பண்புகளை கற்றுக்கொள்ளவேண்டும். இதுபோல் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது பண்புகள் மிக அதிகமாக உள்ளது. பல ஆயிரம் வாசகர்களைக் கவர்ந்த அவருக்கு நானும் ஒரு வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். . அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


