பெரும்பாலுமே கிராமத்திலிருந்து ஒரு எழுத்தாளர் பிரமாதமாக வளருகிறார் என்றால் அது சாத்தியமே இல்லை. அதுவும் அடிப்படையில் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எழுத்துலகில் பிரபலமாகி இருக்கிறேன் என்றேன் என்றால் என்னை ஏற்றி விட்ட ஏணிகள் பலர். அவரில் மிக முக்கியமானவர் தினகரன் முன்னாள் ஆன்மிக ஆசிரியர் பிரபு சங்கர் அய்யா அவர்கள். இன்று தமிழகம் முழுவதும் அறிந்த ஆன்மிக எழுத்தாளராகி இருக்கிறேன் என்றால் அவரும் ஒரு காரணம். நண்பர் எழுத்தாளர் கிருஷ்ணா ஆரம்பத்தில் என்னை அய்யாவிடம் அறிமுகம் செய்து வைத்த பின்பு பல்வேறு வாய்ப்புகளை தந்தார்கள். அத்ரி மலையாத்திரை தொடரைத் தினகரன் ஆன்மிக மலரில் எழுதவும், தினகரன் குழுமத்திலிருந்து வெளிவரும் ஆன்மிக பலனில் ஜமீன் கோயில்கள் தொடர் எழுதவும் என்னை ஊக்குவித்தார். அவர் எழுதிய 108 வைணவ தலங்கள் தொடருக்கும் பாண்டி நாட்டுத் திருப்பதி 11க்கும், மலைநாட்டுத் திருப்பதி 13க்கும் அவருடைய புகைப்பட கலைஞராகவும், காரோட்டியாகவும் பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான் கற்றறிந்தது பல நற்பண்புகள். நேரம் தவறாமை. அதிகம் பேசாமல் காரியத்தினை சித்தி செய்வது. எந்த கோயிலைப் பற்றி எழுதினாலும் அந்த இடத்துக்குச் சென்று தெய்வத்திடம் ஆசி பெற்றுத்தான் எழுதுவது போன்ற நற்பண்புகளை கற்றுக்கொண்டேன். தற்போதும் அந்த நற்பண்பு என்னிடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிரபு சங்கர் அய்யா தற்போது தினகரன் ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட ஆன்மிக பலனில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார். அவர் எழுத்துமேல் வைத்திருக்கும் மரியாதைக்கு இதுவும் ஒரு சாட்சி.அதோடு மட்டுமல்லாமல் எனது நூல் பல்வேறு பட்ட பதிப்பகத்தில் வெளிவர எனக்கு உதவியாக இருப்பவரும் அவர் தான். அவரின் அனுபவம், அவரின் ஆசி என்னைத் தொடர்ந்து வழிநடத்தும். எப்போதும் உங்கள் ஆசி வேண்டும் அய்யா.அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


