சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டிடத்தில் வக்கீல்களுக்கு அறை கட்ட வேண்டுமென வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 72 செண்டு இடத்தில் ரூ.5.5கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 75சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது. இந்த கட்டிடத்தில் வக்கீல்களுக்கென தனி அறை கட்டப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டிடத்தை வக்கீல் சங்க நிர்வாகிகள் தலைவர் கல்யாண்குமார், செயலாளர் இளங்கோ, பொருளாளர் வேணுகோபால், வக்கீல்கள் அந்தோணி ரமேஷ் குமார், ஈஸ்டர்கமல், ஆகியோர் பார்வையிட்டு வழக்கறிஞர்களுக்கான இடம் கட்டுவது பற்றி ஆய்வு செய்தனர்.
இதுபற்றி சாத்தான்குளம் உரிமையியல் அரசு வழக்கறிஞர் மற்றும் சங்க தலைவர் கல்யாண்குமார் கூறுகையில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. வழக்கறிஞர்களுக்கென தனி அறை கட்டப்படவில்லை. நீதிமன்ற கட்டிடம் சாத்தான்குளத்திலிருந்து 2 கிலோமீட்டர் ஊருக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. நீதிமன்றம் செயல்படும்பொழுது வக்கீல்களுக்கென தனி அறை இல்லாததால், வக்கீல்கள் மிகவும் அவதிபடும் நிலை ஏற்படும். எனவே வக்கீல்களுக்கென தனி சேம்பர் கட்ட வேண்டும். மேலும் புதிய நீதிமன்றம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் நாங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என கூறினார்.