எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை விளக்கி பிரேக் இல்லாத சைக்கிளில் சுற்றுப்பயணமாக சாத்தான்குளம் வந்த தொழிலாளியை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (66).இவருக்கு மனைவி மற்றும் இரு மகன், ஒரு மகள் உள்ளனர். தொழிலாளியான இவர் கின்னஸ் சாதனை புரிவதற்காக பிரேக் இல்லாத சைக்கிளில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதிமுகபிரமுகரான இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை விளக்கி சைக்கிள் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி பிடிக்கவில்லையென விலகி, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை பரப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இவர் கடந்த மாதம் 11ஆம்தேதியில் திருத்தணியில் பிரேக் இல்லாத சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கினார். சென்னை, பாண்டிச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, வழியாக கன்னியாகுமரி வந்து பின்னர் நாகர்கோவில், நான்குனேரி வந்து சாத்தான்குளத்துக்கு நேற்று வருகை தந்தார். சாத்தான்குளம் வந்த அவருக்கு அங்குள்ள பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்ஜிஆர் மேல் கொண்ட பற்றால் அதிமுக கட்சியில் உறுப்பினராக இருந்து பணியாற்றினேன். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் நிலைப்பாடு சரியில்லை. ஆதலால் கட்சியை விட்டு விலகி விட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பற்று காரணமாக அவர்களது கொள்கைகளை விளக்கி தமிழகம் முழுவதும் பிரேக் இல்லா சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன்மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சித்து வருகிறேன். இங்கிருந்து நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் சென்று கர்நாடகாவில் எனது பயணததை முடிக்கலாம் என நினைத்துள்ளேன். எனது பயணத்துக்கு காவல்துறையினரும் வரவேற்றுள்ளனர்.பின்னர் இந்தியா முழுவதும்சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என்றார்.