தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு இராபி பருவத்தில் சுமார் 1,70,000 எக்டேர் பரப்பில் மானாவாரி சாகுபடியாக மக்காச்சோளம், சோளம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. மேற்படி பயிர்கள் தற்சமயம் நன்கு வளர்ந்து மேலுரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது.
கடந்த 28.10.2021 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உரக்கடைகளில் உரங்கள் அதிக விலைக்கு விற்க்கப்படுவதாகவும், உரங்களோடு சேர்த்து மற்ற இடுபொருட்களையும் வாங்க வேண்டும் என உரக்கடைக்காரர்கள் நிர்பந்தப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்த புகாரினைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின் பேரில் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை விபரங்கள் மற்றம் உர விலை தொடர்பான புகார்களுக்கு புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த தகவல் அடங்கிய ஸ்டிக்கர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 08.11.2021 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே), தூத்துக்குடி மாவட்ட உர விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். மேற்படி, ஸ்டிக்கர் மாவட்டத்திலுள்ள அனைத்து உரக்கடைகளிலும் விவசாயிகள் பார்வையில் படும்படி ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
மேற்படி ஸ்டிக்கரில் உர விற்பனையாளர்கள் யூரியா உரம் 45 கிலோ மூடையினை ரூ.266.50-க்கும், டி.ஏ.பி உரம் 50 கிலோ மூடை ரூ.1200-க்கும் மற்ற உரங்களை உர மூடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரம் வாங்கும்போது கண்டிப்பாக தங்கள் ஆதார் அட்டையினை கொண்டு விற்பனை முனையக் கருவியின் மூலம் (Pழுளு) பில் போட்டு, பில் தொகையினை செலுத்தி உரக்கடைகளில் இரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரக்கடைகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடிக்கு 0461-2340678 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர், தரக்கட்டுப்பாட்டிற்கு 9655429829 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரிடம் நேரிலோ புகார் தெரிவிக்கலாம் எனவும், விதிகளை மீறி செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


