இது குறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் ஆகிய சான்றிதழ்களும், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவி திட்டங்களும் மற்றும் இணைய வழி பட்டா மாறுதல்களும் மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் ஆணைப்படி, கீழ் குறிப்பிட்டுள்ள 15 வகையான சான்றிதழ்கள் வருவாய்த்துறையின் மூலம் 25.04.2018 அன்று முதல் மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
வாரிசு சான்றிதழ், சிறு /குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு பிடிப்போர் உரிமம், பணம் கொடுப்போர் உரிமம், கல்வி சான்றிதழ்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைக்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ, குடும்ப இடப்பெயர்ச்சி சான்றிதழ், வேலை இல்லாதவர் என்பதற்கான சான்றிதழ், விவசாய வருமானச் சான்றிதழ, குடியிருப்பு சான்றிதழ்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் / கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி ஒன்றியகங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் மூலம் இயங்கி வரும் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் மேற்கண்ட சான்றிதழ்களின் மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
அரசு பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான மனுக்களை பெறுவதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60/- சேவைக்கட்டணமாக பெறப்படுகிறது. எனவே பொதுமக்கள் அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களில் தகுந்த ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை கொண்டு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.