சாத்தான்குளம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.![]()
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கினறு கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் சுடலைமணி மகன் செந்தில் (45). இவர் சென்னையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு முதல் மனைவி இறந்து விட்டதால் 2வது திருமணம் செய்துள்ளார். ஒரு குழந்தை உள்ளது. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் தசரா கமிட்டியில் நிர்வாகியாக இருந்தபோது வரவு செலவு கணக்கினை சரிவர கொடுக்கவில்லையாம்.
இதுதொடர்பாக அந்த ஊரைச் சேர்ந்த காளிமுத்து மகன் லிங்கம் (50), சாமுவேல் மகன் ஜெகன் (32) ஆகிய இருவரும் செந்திலிடம் கணக்கு கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் செந்தில் அவதூறாக பேசினாராம். இதனால் அவர்கள் இருவரும் ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பழனியப்பாபுரம் – பேய்க்குளம் சாலையில், தனது நண்பர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவருடன் செந்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த லிங்கம், ஜெகன் ஆகிய இருவரும் செந்திலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதில், பைக்கை ஓட்டிவந்த சின்னதுரை உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லிங்கம், ஜெகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெகன், வெங்கடேஷ் பண்ணையார் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெங்கடேஷ் பண்ணையார் நற்பனி மன்றத்தின் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலளாராக உள்ளார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


