இராமனுஜம்புதூர் பகுதியில் கடந்த 1 வருட காலமாக ஆற்று தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கருங்குளம் ஒன்றியம் கூட்டு குடிதண்ணீர் திட்டம் கடந்த 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் கருங்குளம் ஒன்றியத்தில் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி என இருபிரிவாக பிரித்து சுமார் 63 கிராமத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் முறப்பநாடு கிராமத்தில் நீர் உறிஞ்சும் கிணறு போடப்பட்டு, அங்கிருந்து குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்காக அனவரதநல்லூர், கருங்குளம், அரசர்குளம் ஆகிய பகுதியில் நீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.
கருங்குளம் வரையில் இந்த கூட்டு குடிதண்ணீர் திட்டம் வெற்றி கரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கருங்குளம் நீரேற்று நிலையத்தை தாண்டி குடிதண்ணீர் செல்லாமல் கடந்த ஆண்டு தடைபட்டு விட்டது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கருங்குளம் நீரேற்று நிலையம் அருகில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தாதன்குளம், தெற்கு காரசேரி, கிளாக்குளம், அரசர்குளம், வல்லகுளம், சேரகுளம், இராமனுஜம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு குடிதண்ணீர் போர் தண்ணீராகவே செல்கிறது. இதனால் பொதுமக்கள் ஆற்று தண்ணீர் இன்றி சிரமப்படுகிறார்கள்.
இதுகுறித்து மல்லல் கிராமத்தினை சேர்ந்த முத்து கூறும் போது, எங்கள் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. எந்த பகுதியில் போர் போட்டாலும் உப்பு தண்ணீர் தான் வருகிறது. எனவே கடந்த 1998 ஆம் ஆண்டு கருங்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு ஆற்று தண்ணீர் வழங்கவில்லை. மாறாக கருங்குளத்தில் போர் போடப்பட்டு அதன் மூலமாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுகிறார்கள். தாமிரபரணி தண்ணீர் தருவதற்காக தான் இந்த கூட்டு குடிதண்ணீர் திட்டம் உருவாக்கப்பட்டது. மாறாக தற்போது போர் த ண்ணீர் வழங்க வேண்டும் என்றால் அந்தந்த ஊரிலேயே ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தாமிபரணி ஆற்று தண்ணீரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
கருங்குளம் ஒன்றியத்தில் தென்பகுதியான வறட்சி கிராமங்களில் உடனடியாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் வழங்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.