நவத்திருப்பதிகளில் 9வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் நடந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் நவத்திருப்பதிகளில் 9வது திருப்பதியாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், ராமானுஜர் ஆகியோரது அவதார தலமாக விளங்கும் ஆழ்வார்திருநகரியில் 107 வைணவ தலங்களில் இல்லாத வகையில் நான்கு தேர்களை அரசர்கள் மற்றும் முன்னோர்கள் ஏற்படுத்தி பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்தக் கோவிலில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என நான்கு மாதங்களும் நடைபெறும் திருவிழாக்களின் போது 9ம் நாள் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. உற்சவர் பொழிந்து நின்ற பெருமாள் காலை 7 மணி அளவில் ஊர்லவமாக வந்து தேரில் ஏறினார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய ரத வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.