
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு எதிராக ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்படி கிராமப்பகுதிகளில் தெருவில் உள்ள குடிநீர் இணைப்புகளை எடுத்துவிட்டு வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி பயனாளி ஒருவரிடமிருந்து டெபாசிட் தொகையாக ரூபாய் ஆயிரமும் பங்களிப்பு தொகையாக 514 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இதன்படி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆறாம்பண்ணை கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் 890 குடும்பத்தினர்களின் வீடுகளில் நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்க ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஆறாம்பண்ணை கிராமம் உள்ள நிலையில் கோடை காலத்திலும் கூட குடிநீர் தட்டுப்பாடு எப்போதுமே ஏற்பட்டதில்லை என்ற காரணத்தால் கூடுதல் செலவையும் குடிநீர் வரி வசூலிக்கப்படும் என்பதாலும் ஜல் ஜீவன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறாம்பண்ணை கிராம மக்கள் சுமார் பெண்கள் உள்பட150க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் முறப்பநாடு போலீஸாரின் எச்சரிக்கையின் பேரில் சாலை மறியலை கைவிட்டு விட்டு ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவறு என முறப்பநாடு போலீசார் கலைந்து போகும்படி எச்சரித்தனர்.
இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் சங்கர நாராயணன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன், மண்டல அலுவலர் லட்சுமணன் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனரிடம் பொது மக்களின் கோரிக்கை குறித்து தெரிவிப்பது என்றும் அதுவரை தற்காலிகமாக வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பது எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.