
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வருவாய்துறை தொடர்பான சான்றிதழ்களைத் தாங்களே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலம் 20 வருவாய்துறை சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத்துறை சேவைகள் வழங்கப்படுகின்றன.
பொது சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற 20 வருவாய் துறை சான்றிதழ்கள் பெறுவதற்கான சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
20 வருவாய் துறை சான்றிதழ்களை பொதுமக்கள் www.tnesevai.tn.gov.in/Citizen / என்ற இணையதள முகவரியில் தங்களை பதிவு செய்து பயன்பெறலாம். User Name பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகள் www.tnesevai.tn.gov.in/videotutoral.html மற்றும் www.tnesevai.tn.gov.in/usermanual.html ஆகிய இணையதள முகவரி சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் UMANG என்னும் ஆன்ராய்டு செயலி மூலமாகவும் பொது மக்கள் வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட, இருப்பிட சான்றிதழ்களை செல்போன் மூலமாகவும் விண்ணப்பித்து சேவைக் கட்டணமாக ரூ.60/-ஐ இணையதள வங்கி (Internet Banking) அல்லது கிரேடிட், டெபிட், ரூபே கார்டுகள் மூலம் செலுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.