
ஆதிச்சநல்லூர் கார்பன் ரேட்டிங் செய்ய அமெரிக்கா தமிழ் சங்கம் உதவி செய்யும் டாக்டர் சம்பத்குமார் அதிரடியாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தாமிரபரணி நதிக்கரை அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் அருகே சுமார் 114 ஏக்கர் பரப்பில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இந்தியாவில் முதல் முதலில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்த இடம் இதுவாகும்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த சாகோர் என்பவர் இங்கு 1876 ஆம் ஆண்டு ஆய்வு செய்தார். அப்போது இங்கு கிடைத்த பொருள்களை ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகர் அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்றார்.
1902ம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பரம்பில் அலெக்ஸாண்டர் இரியா என்பவர் ஆய்வு நடத்தினார்.அப்போது ஏராளமான பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களும், இரும்பு படைக்கலன்களும், வாள், கத்திகள் கோடாரிகள், பொற்பட்டயங்களும் கிடைத்தது.
அந்த பொருள்களை 21 மாட்டுவண்டியில் ஏற்றி திருநெல்வேலி இரயில் நிலையம் மூலமாக சென்னைக்கு எடுத்து சென்று அங்கு காட்சிப்படுத்தினார்.
பின்னர் 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இந்திய தொல்லியல் ஆராய்ச்சி கழக சென்னை சரக கண்காணிப்பாளர் தியாகி சத்தியமூர்த்தி தலைமையில் இங்கு ஆராய்ச்சி நடத்தினர். சுமார் 14 வருடங்கள் கழித்தும் ஆய்வறிக்கை வெளியிட வில்லை.
இந்நிலையில் கடந்த 2004ம் வருடம் ஆராய்ச்சி நடந்த ஆய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும், ஆதிச்சநல்லூரில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை இங்கு கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும், மீண்டும் அகழாய்வு செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரனை செய்த நீதியரசர்கள் கிருபாகரன், தாரணி ஆகியோர் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும், அதற்கு மத்திய மாநில அரசு நிதி ஓதுக்கீடு செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். முறைப்படி சத்திய மூர்த்தி அதற்கான மதிப்பீட்டை தயார் செய்து அனுப்பினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனாலும் மத்திய அரசு இதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதை கடந்த 20 தேதி நடந்த கோர்டில் நடந்த விசாரணையில் நீதிபதிகள் கண்டித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அமெரிக்காவில் உள்ள மத்திய புளோரிடா தமிழ்ச்சங்கம் முன்னாள் தலைவரும் அங்கு நரம்பியல் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் சம்பத்குமார் ஆதிச்சநல்லூரை நேற்று பார்வையிட வந்தார்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
தற்போது ஆதிச்சநல்லூர் பெயர் பத்திரிக்கை, ஊடகங்கள் மூலம் உலகதமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே எனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து காரிலேயே ஆதிச்சநல்லூர் வந்து சேர்ந்தேன். பல கிலோ மீட்டர் கடந்துவந்த நான் இங்கு வெறுமையாக இருப்பதை கண்டு மனது உடைந்து விட்டேன். மிக பெருமை மிக்க ஆதிச்சநல்லூர் புகழை மீட்டெடுக்க மதுரை உயர் நீதி மன்ற நீதியரசர்கள் கிருபாகரன், தாரணி ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசு பொறுப்பில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இங்கு எங்கு சென்று பார்த்தாலும் எந்த சுவடும் இல்லை. எனவே தமிழக தொண்மையை மீண்டெடுக்கும் நிலை உலக தமிழர்கள் மத்தியில் வந்துள்ளது. எனவே ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பொருள்களுக்கு கார்பன் டேட்டிங் செய்ய ஆகும் நிதியை அமெரிக்காவில் உள்ள மத்திய புளோரிடா தமிழ் சங்கம் சார்பில் ஏற்று கொள்கிறோம். அமெரிக்கா சென்றவுடனே அதற்கான தீர்மானம் நிறைவேற்றி முறைப்படி அனுப்பி வைக்கவுள்ளோம். மேலும் அருங்காட்சியம் அமைப்பது உள்ள வேறு உதவிகள் ஏதாவது இருந்தாலும் செய்ய தாயராக உள்ளோம் என்றார்.
அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உள்பட பலர் வந்தனர்.
நேற்று மத்திய அரசு சார்பில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இனி ஆய்வு நடத்த வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.