இது தொடர்பாக சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 07.08.2018 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணி முதல் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட சத வீதமுள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் வேலையில் இல்லாத மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெறாத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை கொண்டு வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இச்சிறப்பு முகாம் மாதாந்தோறும் கோட்ட அளவில் சுழற்சி முறையில் ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். மேலும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, இறப்பு நிவாரணம், திருமண உதவித் தொகை கோரும் பயனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தெரிவித்துள்ளார்.