ஸ்ரீவைகுண்டத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித தவறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலருமான பரிமளா தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருமான கோபாலகிருஷ்ணன், சாத்தான்குளம் தாசில்தார் செல்வக்குமார், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் செந்தூர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி வகுப்பின் போது, மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் பணியாளர்களும் மேற்பார்வையாளர்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கள் ரமேஷ், லெனின், தேர்தல் துணை தாசில்தார் தங்கையா, கோபால் உள்பட வாக்கு என்னும் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கான கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது.