ஸ்ரீவைகுண்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வோருக்கான கொரானா பரிசோதனை முகாம் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வோருக்கான கொரானா பரிசோதனை முகாம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்குகளை எண்ணும் பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு குறைந்தது 72 மணி நேரங்களுக்கு முந்தைய கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசோதனை தேவை இல்லை எனவும் அதற்கான ஆதாரங்களை காட்டி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தரும் கொரானா தடுப்பூசி போட்டவர்களை தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறிவதற்கான சிறப்பு முகாம் ஸ்ரீவைகுண்டத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், நகர செயலாளர் காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ். ஆதிச்சநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கணேஷ். அமமுக மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியன், காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லகண்ணு நகர தலைவர் சித்திரை உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.