கொற்கை அகழாய்வு பணியில் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் மற்றும் சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிப்பு.

கொற்கை அகழாய்வு பணியில் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் மற்றும் சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிப்பு. அதிகாரிகள் உற்சாகம்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை கொற்கை என மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி துவங்கியது.
கொற்கையில் கடந்த 1968&69 வருடம் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அந்த அகழாய்வு பணி தான் தமிழக தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வு பணி இந்த அகழாய்வு பணிதான். கடந்த முறை அகழாய்வின் போது 2800 பழமையானது கொற்கை என உறுதியானது. இங்கு துறை முகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்று மதி இறக்கு மதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இவ்விடம் விளங்கியது எனவும் அறியப்பட்டது. சங்க இலக்கியத்தில் பழமைவாய்ந்த துறைமுக நகரமான இந்த கொற்கையில் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு தமிழக தொல்லியல் துறை மூலமாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காகக் கொற்கையில் 11 குழிகள் தோண்டப்பட்டது. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி,காளீஸ்வரன் உள்பட 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது இந்த அகழாய்வு பணியில் 2800 வருடங்கள் பழமையான செங்கல் கட்டுமானம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள செங்கற்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் உள்ளது. அதே போல் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமான ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் காணப்படுகிறது. மேலும் அதே குழியில் சங்குகள் அறுத்த பின்னர் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் காணப்படுகிறது. மேலும் இந்த அகழாய்வு குழிகளில் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த அகழாய்வு பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கொற்கை துறை முகம் மிகப்பெரிய வியாபார தலமாக இருந்துள்ளது. முன்னால் நடந்த ஆய்வில் கிடைத்த பொருள்களைத் தென்காசி மாவட்டம் குற்றாலம் வைப்பறையில் காட்சிக்கு வைத்தனர். தற்போது இங்குக் கிடைக்கும் பொருள்களைச் சேகரித்து, பழைய பொருள்களையும் கொண்டு வந்து இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாக்டர் கால்டுவெல் அவர்கள் இவ்விடத்தில் அகழாய்வு செய்த போது தெரு முழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கிடைத்தது என எழுதியிருந்தார். தற்போதும் அகழாய்வின் போது நிறையச் சங்குகள் ஆங்காங்கே கிடைக்கிறது.
கொற்கையின் முழுமையான அகழாய்வு வெளியாகும் போது, உலகமே தமிழனின் பெருமையைச் சிறப்பாகப் பேசும் காலம் வரும். எனவே கொற்கை அகழாய்வை அகழாய்வு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
பழமை மாறாமல் புதுப்பிக்கவேண்டும்
கொற்கையில் மிகவும் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளது. இந்த கல்வெட்டு மஞ்சள் அடித்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலைப் பழமை மாறாமல் கல்வெட்டுகளை வெளியே தெரியும் படி சீரமைக்க வேண்டும். இதுபோல் கொற்கை துறை முகம் இருந்த இடத்தில் மாதிரி துறை முகம் அமைத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். அதன் பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மீண்டும் கொற்கை பகுதியைச் சிறப்பாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்துள்ளார்.